கீவ்: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்ட உடன்பாடு காரணமாக இரு நாடுகளும் 300 போர் கைதிகளை விடுதலை செய்தன. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த மூன்று ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், இரு நாடுகளும் நூற்றுக்கணக்கான மக்களை போர் கைதிகளாக அடைத்து வைத்துள்ளன. போர் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், மூன்றாம் தரப்பு நாடுகள் தலையிட்டு இப்பிரச்னைகளுக்கு யோசனைகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் நாளை ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால், இரு நாட்டின் போர் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு நாட்டின் அரசுகளிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ேபச்சுவார்த்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக நேற்று 300க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை இரு நாடுகளின் அதிகாரிகளும் பரிமாற்றம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், எங்களது தரப்பில் இருந்து 150 உக்ரைன் போர் கைதிகளை விடுவித்ததாக கூறப்பட்டது.
ஆனால் உக்ரைன் தரப்பில் 189 பேர் கைதிகள் வீடு திரும்பியதாக கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் உள்ள முரண்பாடுகள் குறித்து தகவல்கள் ஏதுமில்லை. இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் வெளியிட்ட பதிவில், ‘போர் கைதிகளை விடுவித்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உதவிய ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும் விடுவிக்கப்பட்ட உக்ரைன் போர் கைதிகளை பேருந்தில் அழைத்து வரும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
The post புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 300 போர் கைதிகள் விடுதலை: ரஷ்யா – உக்ரைன் இடையே உடன்பாடு appeared first on Dinakaran.