பள்ளி பாடபுத்தகங்களில் வங்கதேச தந்தை ஷேக் முஜிபூர் ரகுமான் பெயர் நீக்கம்: இடைக்கால அரசு நடவடிக்கை

டாக்கா: வங்கதேசத்தில் பள்ளி பாடபுத்தகங்களில் வங்கதேச தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 1971ம் ஆண்டு வங்கதேச விடுதலை போரில் முக்கிய பங்கு வகித்தவர் ஷேக் முஜிபூர் ரகுமான். நாட்டின் விடுதலையில் முக்கிய பங்காற்றியதற்காக முஜிபூர் ரகுமான் வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.அவரது மகளும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசினா 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்.

கடந்த ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தையடுத்து ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து பிரபல பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஷேக் முஜிபூர் ரகுமானின் சிலைகள் குறி வைத்து தாக்கப்பட்டன. முஜிபூர் படுகொலை செய்யப்பட்ட ஆகஸ்ட் 15ம் தேதி அனுசரிக்கப்படும் தேசிய விடுமுறையையும் இடைக்கால அரசு ரத்து செய்துள்ளது.

தற்போது, ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்களில் ஷேக் முஜிபூர் ரகுமானுக்கு அளிக்கப்பட்டிருந்த தேச தந்தை என்ற பட்டம் நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல் 1971,மார்ச் 26ல் நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தவர் என்பதில் முஜிபூர் ரகுமானுக்கு பதிலாக ஜியாவூர் ரகுமான் பெயர்இடம் பெற்றுள்ளது.அவாமி லீக் கட்சி தொண்டர்கள் கூறுகையில், வங்கதேசத்தை சுதந்திர நாடு என பிரகடனம் செய்தவர் ஷேக் முஜிபூர் ரகுமான். முஜிபூர் ரகுமானின் உத்தரவுப்படி அப்போது ராணுவ கமாண்டராக இருந்த ஜியாவூர் ரகுமான் அதை வாசிக்க மட்டும் செய்தார் என்றனர்.

The post பள்ளி பாடபுத்தகங்களில் வங்கதேச தந்தை ஷேக் முஜிபூர் ரகுமான் பெயர் நீக்கம்: இடைக்கால அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: