நியூயார்க்: ரூ.2,000 கோடி தொடர்பான அதானி லஞ்ச புகார் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக இந்திய தொழிலபதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதானி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்ற வழக்கு தொடுத்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் தரப்பில் இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், ‘நீதித்துறை செயல்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், மூன்று வழக்குகள் வெவ்வேறு அமர்வில் விசாரிக்கப்படும் பட்சத்தில் விசாரணை தேதிகளில் முரண்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரிப்பார். அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனக் கூறி அதானி குழுமம் மறுத்துள்ளது. ஆனால் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தியாவில் எதிர்கட்சிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது கூட, அதானி லஞ்சப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரூ2,000 கோடி லஞ்ச புகார் தொடர்பான 3 வழக்குகள்; ஒரே நீதிபதி அமர்வு விசாரிக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு: அதானி குழுமத்திற்கு எதிரான வழக்கில் திருப்பம் appeared first on Dinakaran.