தியாகராஜ நகர் : தமிழக அரசின் சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் `புதுமைப்பெண்’ விரிவாக்க திட்டத்தை தூத்துக்குடியில் நேற்று (30ம் தேதி) காலை 9.15 மணிக்கு நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா பாளை நேருஜி கலையரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற தமிழக சபாநாயகர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்குவதற்கு அடையாளமாக வங்கி பரிவர்த்தனை அட்டை (ஏடிஎம் கார்டு) வழங்கி துவக்கிவைத்தனர்.
மேலும் உடனடியாக பணம் வங்கி கணக்கில் செலுத்தியதற்கான விவரம், மாணவிகளின் கைப்பேசியில் குறுஞ்செய்தியாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் நெல்லை மாவட்டத்தில் 83 கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 5,181 மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இத்திட்டத்தின்கீழ் ஏற்கனவே 2022-23ம் ஆண்டில் அரசு பள்ளியில் பயின்ற 1,567 மாணவிகளும், 2023-24ம் ஆண்டில் 1,686 பேரும் பயன்பெற்று வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கான `தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் மூலம் 2024-25ம் ஆண்டில் 8,941 மாணவர்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடக்க விழா நிகழ்வில் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன், மேயர் ராமகிருஷ்ணன், அப்துல்வஹாப் எம்எல்ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா, டிஆர்ஓ சுகன்யா, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணை இயக்குநர் (சிறப்பு திட்டம்) உமாதேவி, முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்எல்ஏ முத்துசெல்வி, மகளிர் திட்ட அலுவலர் லக்குமணன், மாவட்ட சமூக நல அலுவலர் காஜி நிஷாபேகம் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post `புதுமைப் பெண் விரிவாக்க திட்டம்’ நெல்லையில் 5,181 மாணவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவித் தொகை appeared first on Dinakaran.