திருவண்ணாமலை : உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ₹1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. டிஆர்ஓ ராம்பிரதீபன், எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) சரண்யா வரவேற்றார்.
விழாவில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் மாணவிகளுக்கு, அதற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கி, கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து முடித்து, உயர்கல்வி படிக்கும் 689 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பெண்கள் உயர்கல்வியை பெற்று, யாருடைய உதவியும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் கொண்டுவந்திருக்கிறார். இத்திட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் 3.5 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
பெண்கள் கல்வியின் மூலம் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும். பொருளாதாரம் காரணமாக கல்வி பெறும் வாய்ப்பு இடையில் தடைபட கூடாது. அதற்கு, இத்திட்டம் பெறும் உதவியாக இருக்கும். இந்தியாவிலேயே தன்னிைறவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 94 கல்லூரிகளில் படிக்கும் 13352 மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர். தற்போது, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதனால், மாநிலம் முழுவதும் கஊடதலாக 74 ஆயிரம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை, கல்வி வளர்ச்சிக்கு மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி மற்றும் கல்லூரி முதல்வர்கள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம் 689 மாணவிகளுக்கு மாதம் ₹1000 உதவித்தொகை appeared first on Dinakaran.