ராமநாதபுரம், டிச.31: மீனவரின் உடல் உள்ளுறுப்பு ஆய்வறிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து, மீனவரின் குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக உச்சிப்புளி அருகே எம்.பி.கே. வலசையைச் சேர்ந்த மீனவர் முனியாண்டியின் மனைவி வசந்தா மற்றும் அவரது உறவினர்கள், சிஐடியு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் வந்தனர்.
வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன்பிடிக்கும்போது சேற்றில் சிக்கி உயிரிழந்த வசந்தாவின் கணவர் முனியாண்டியின் உடல் உள்ளுறுப்பு ஆய்வு அறிக்கையை அரசு மருத்துவமனை வழங்காததை கண்டித்தும், அவரது இறப்பிற்கு மீன்வளத்துறை நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென அமர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலுவிடம் வழங்கினர்.
The post மீனவர் குடும்பத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.