சீதாபிராட்டிக்கு அனுமன் கூறிய அடையாளங்கள்!

அசோகவனத்தில் அரக்கியரிடையே இராவணனின் தாங்கொணாக் கொடுமைக்கு உள்ளாகி, ராமன் வந்து தன்னை மீட்கவில்லையே என்ற வருத்தம் மேலோங்க தன்னையே அழித்துக்கொள்ள எண்ணி, சேலைத்தலைப்பையே தூக்குக் கயிறாக்கி, மரத்தில் கட்டி, தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணிய தருணத்தில், ஏதோ ஓர் சக்தி தன்னைத் தடுப்பது போன்று உணர்ந்தாள் சீதா பிராட்டி. ராமதூதனான அஞ்சனை மைந்தன் அனுமன் அம்மரத்தின் மீது அமர்ந்திருந்தான். ‘தெய்வீக ஒளி பொருத்திய இவரே சீதா பிராட்டி’ என்றுணர்ந்த அனுமனுக்கு எப்படி இவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது? இந்த அரக்கிகளின் பார்வையில் படாதவாறு எப்படி தன் உருவத்தினைக் காண்பிப்பது?

இலங்கையிலோ தன் இனத்தைச் சார்ந்தவர்களே இல்லையே தன் உருவினைக் காட்டினால் சீதா பிராட்டி தன்னையும் இராவணனின் மாயவடிவம், மாயமான் போன்று நினைத்தால், உடனே தன் உயிரை மாய்த்துக் கொள்வார்களே, பின்பு நாமும் அரக்கர்களால் பிடிபட்டுவிடுவோமே, தன்னைவிட்டால் ராமபிரானுக்குத் தூது சென்று செய்தி சொல்பவர் யார்? தன் உருவினைக் காட்டாமல் ஜனகனின் மகளுக்கு தன்னை உணர்த்திட உபாயம் என்ன? என்று சொல்லின் செல்வன் அனுமன் பலவாறு சிந்தித்த வேளையில், மின்னலெனத் தோன்றியது ஓர் எண்ணம்.

உடனே அனுமன், தம் குரலினை இனிதாக்கி, மிக மெல்லிய குரலில், ‘‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்… ஜெய் சீதா ராம்!’’ என்று ராமபிரானின் அருமை பெருமைகளையெல்லாம் சீதாபிராட்டி மட்டும் கேட்கும்படி பாடத் தொடங்கினான். இன் குரலெடுத்துப் பாடிய படியே பணிவுடன் அவள் முன் வந்து நின்றான். ராம நாமத்தினைக் கேட்ட கணத்திலே மகிழ்ந்த சீதாபிராட்டியும், மறுகணம் குரங்கு வடிவம் தாங்கி நின்ற அனுமனைக் கண்டு அதிர்ந்தாள்.

அஞ்சினாள். அச்சமுற்று ‘குரங்கு வடிவில்’ வந்த இராவணனோ? என எண்ணினாள். ஆனால், ராமன் புகழை செவிகளுக்குத் தொடர்ந்து தேனாகதித்திக்க அளித்த மாருதியைக் கண்டு மனம் தெளிந்து மகிழ்ந்தாள். இதைக் குறித்து கம்பர் பெருமான்;

‘‘செவிக்குத் தேனென இராகவன்
புகழினை திருத்தும்
கவிக்கு நாயகன்’’
– எனப் போற்றிப் பாடியுள்ளார்.

ஆனாலும், சீதாபிராட்டிக்கு அதுவரை கண்டிராத குரங்குவடிவ அனுமன் மீது சந்தேகம் நீங்கிய பாடில்லை. அவன் கண்களில் அச்சமும் சந்தேகமும் திரண்டிருந்தது. இதனைக் குறிப்பில் குறிகாணும் வல்லமை படைத்த அனுமன் உடனே ராமனும் சீதையும் இணைந்து இன்புற்ற காலத்தில் வாழ்ந்திருந்த போது, நடந்த முக்கிய சம்பவங்களை வரிசையாக எடுத்துக் கூறுகிறான் சொல்லின் செல்வன் அனுமன். வாயு புத்திரன் அனுமன் அன்னை சீதாபிராட்டிக்கு பெரியாழ்வார் அருளிய பாசுர முகமாக எடுத்துக் கூறும் அழகைப் பாருங்கள். சீதையின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையெல்லாம் அழகிய சொல்லெடுத்து அடுக்கடுக்காக. சீதைக்கு அனுமன் கூறிய அடையாளங்கள் வருமாறு, கர்வம் கொண்ட பரசுராமரின் தவத்தைச் சிதைத்தது.

‘‘நெறிந்த கருங் குழல் மடவாய்!
நின்னடியேன் விண்ணப்பம்,
செறிந்தமணி முடிச்சனகன்,
சிலையிறுத்து நினைக் கொணர்ந்த,
தறிந்து, அரசு களை கட்ட,
அருந்தவத்தோ னிடை விலங்க,
செறிந்த சிலை கொடு தவத்தைச்,
சிதைத்ததுமோ ரடையாளம்!’’

‘‘ஜனகராஜன் திருமகளாகிய சீதா பிராட்டியை ராமபிரான் சிவதனுர் பங்கம் செய்து, மணம் செய்துகொண்டதை அறிந்து கொண்டு, கடுங்கோபத்தோடு பரசுராமர், ராமபிரானிடம் விஷ்ணுதனுசைக் கொடுத்து நாணேற்றச் சொல்ல, எளிதாக நாணேந்திய எம்பெருமான் அந்த அம்புக்கு இலக்காகப் பரசுராமரது அருந்தவத்தைச் சிதைத்து அவரது பெருந்தவச் செருக்கை அடக்கியதை சொல்லின் செல்வன் அனுமன் சீதா பிராட்டியிடம் ஓர் அடையாளமாகக் கூறுகிறார். நந்தவனத்தில் தனித்திருந்த போது சீதை மல்லிகை மாலையால் ராமனைக் கட்டியது.

‘‘அல்லியம்பூ மலாக் கோதாய்!
அடிபணிந்தேன் விண்ணப்பம்,
சொல்லுகேன் கேட்டருளாய்,
துணை மலர்க்கண் மடமானே!
எல்லியம் போ தினிதிருத்தல்,
இருந்த தோ ரிடவகையில்,
மல்லிகைமா மாலை கொண்டங்
கார்த்ததுமோ ரடையாளம்!’’

‘‘சீதா பிராட்டியும், எம்பெருமானும் வனவாசகாலத்தில் ஒரு சமயம் தனித் திருக்கையில் சொக்கட்டான் ஆடுகிறார்கள். வென்றவர் தோற்றவரை மல்லிகை மலர்ச்சரத்தால் மரத்தோடு பிணைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு விளையாட்டு துவங்குகிறது.

‘அஜிதர்’ (வெல்லவொண்ணாதவர்) என்ற பெயர் படைத்த எப்பெருமான், பிராட்டியிடம் விளையாட்டில் தோற்க, ஒப்பந்தத்தின்படி பிராட்டி, எம்பெருமானை மலர்ச்சரத்தால் அருகிலிருந்த மரத்தோடு கட்ட, ராமபிரானும் புன்முறுவலோடு கட்டுண்டு நின்ற நிகழ்ச்சியை அஞ்சனை மைந்தன் சொல்லின் செல்வன் அனுமன் மற்றுமொரு அடையாளமாகத் தெரிவிக்கிறார். தந்தை தசரதனின் கட்டளையை சிரமேற்கொண்டு தம்பி லட்சுமணனோடு காடு சென்றது.

‘‘கலக்கியமா மனத்தனளாய்க்
கைகேசி வரம் வேண்ட,
மலக்கியமா மனத்தனனாய்
மன்னவனும் மறாதொழிய,
‘குலக்குமரா! காடுறையப்
போ’ என்று விடை கொடுப்ப,
இலக்குமணன் தன்னொடுமங்
கேகியதோ ரடையாளம்!’’

பிரியமான தோழி மந்தரையின் சூழ்ச்சி யால் மனம் மாறிய கைகேயி, தன் கணவர் தசரதரிடம் முன்னர் இருவரங்கள் வேண்டிப் பெற்றதை நினைவு கூர்ந்து, இருவரங்கள் வேண்டியதும், வாய்மைக்குக் கட்டுப்பட்ட மன்னன் மறுக்க முடியாமல் வரமளித்தார். அதன்படி, அயோத்தி அரசனாகப் பட்டம் சூட்டப்படும் நிலையிலிருந்த ராமபிரான் அதை விடுத்து ராமனைக் காடுறையப் போகச் செய்தாள் கைகேயி. இதைக் கேட்ட ராமன் மிகவும் மகிழ்ச்சியோடு தம்பி லட்சுமணனோடு கானகம் எழுந்தருளிய நிகழ்ச்சியை வாயுபுத்திரன் அனுமன் சீதாபிராட்டிக்கு மற்றொரு அடையாளமாகக் கூறினார். படகோட்டி குகன், ராமபிரானுடன் தோழமை கொண்டது.

‘‘வாரணிந்த முலைமட வாய்!
வைதேவீ! விண்ணப்பம்,
தேரணிந்த அயோத்தியர் கோன்
பெருந்தேவீ! கேட்டருளாய்,
கூரணிந்த வேல் வலவன்
குகனோடும் கங்கை தன்னில்,
சீரணிந்த தோழமையைக்
கொண்டது மோ ரடையாளம்!’’

சிருங்கிபேரபுரத்து அதிபனும், வேடுவனுமான அன்பிற்சிறந்த குகனோடு தோழமை பூண்டு ராமபிரான், சீதை, லட்சுமணனுடன் கங்கையாற்றைக் கடந்து செல்கிறார். படகோட்டி குகனின் அளப்பறியா அன்பு மழையில் நனைந்து உருகுகிறார். ‘ராம, லட்சுமண, பரத, சத்ருக்கனன் என நாங்கள் நால்வரும்தான் தசரத சக்கரவர்த்தியின் அருந்தவப் புதல்வராகப் பிறந்தோம். நாங்கள் நான்கு சகோதரர்களாக இதுவரையிலும் இருந்தோம்.

அன்புக்குரிய குகனே, இன்று முதல் உன்னோடு ஐவரானோம்!’ என்றுகூறி சக்கரவர்த்தித் திருமகன் ராமபிரான், குகனை மார்போடு அணைத்துக் கொண்டு, சீதா பிராட்டிக்குக் குகப் பெருமானை ஒரு மைத்துனராகவே அறிமுகம் செய்து வைத்தது, மனதை நெகிழ்விக்கும் அந்த இனிய நிகழ்ச்சியைச் சொல்லின் செல்வன் அனுமன் சீதாபிராட்டிக்கு மற்று மொரு அடையாளமாகக் கூறினார். சித்திரக் கூடத்தில் தம்பி பரதன், ராமனை வணங்கி பாதுகை பெற்றது.

‘‘மானமரு மென்னோக்கி!
வைதேவீ! விண்ணப்பம்,
கான மரும் கல்லதர் போய்க்
காடு றைந்த காலத்து,
தேனமரும் பொழிற் சாரல்
சித்திரக் கூடத்திருப்ப,
பான் மொழியாய்! பரத நம்பி
பணிந்தது மோ ரடையாளம்!’’

வனவாச காலத்தில், இயற்கை எழில் நிறைந்த சித்திரகூடம் எனும் இனிமையானதொரு இடத்தில், சக்கரவர்த்தித் திருமகனான ராமபிரான், சீதாபிராட்டியுடனும், இணைபிரியா இளவல் லட்சுமணனோடும் தங்கியிருந்தார். அப்போது இளைய தம்பி, பரத நம்பி பெரும் படையுடன் வந்து அண்ணல் ராமபிரானின் திருவடி பணிந்து, அயோத்தி திரும்பி, முடிசூடிக்கொள்ளுமாறு பணிந்து வேண்டி அழைத்தபோது, ராமபிரான் மறுத்துரைத்து தமது நிலைகளான ஸ்ரீ பாதுகைகளை அளித்து, ஆறுதல் மொழிகள் பல கூறி பரதாழ்வானை அன்புடன் அயோத்திக்கு வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சியாக சம்பவத்தை நவ வியாகரண் பண்டிதரும், சர்வ மந்திர தந்திர யந்திர சொரூபியுமான அஞ்சனை மைந்தன் பணிவன்புடன் சீதா பிராட்டிக்கு எடுத்துக் கூறிய மற்றொரு அடையாளமாகும். சீதையைத் துன்புறுத்திய காகாசுரனை – அறுகம்புல்லால் விரட்டி அவன் கண்ணொன்றை அறுத்தது.

‘‘சித்திரக்கூ டத்திருப்பச்
சிறுகாக்கை முலை தீண்ட,
அத்திரமே கொண்டெறிய
அனைத் துலகும் திரிந்தோடி,
‘வித்தகனே! இராமாவோ!
நின்னபயம்!’ என்றழைப்ப,
அத்திறமே அதன் கண்ணை
அறுத்ததுமோ ரடையாளம்!’’

சித்திர கூடத்தில் ராமபிரான், சீதையுடனும் லட்சுமணனுடனும் இனிதே வாழ்ந்திருந்தார்கள். ஒரு நாள் மதியம் வேளையில், சீதையும் ராமனும் தனித்திருந்த வேளையில், ராமபிரான் பிராட்டியின் மடிமீது திருமுடி சாய்த்துக் கண் அசரும் வேளையில், இந்திரன் மகனாகிய ஜயந்தன் காக்கையுருக்கொண்டு, சீதாபிராட்டியைச் சுற்றிச்சுற்றி வந்தான். அதீத மோகங்கொண்டு அன்னை சீதையைப் பல வகையிலும் துன்புறுத்தினான். கைகளைக் கொத்தினான். தோளைக் கொத்திக் கிழித்தான். அண்ணலின் தூக்கம் கெடாது அமைதி காத்தாள் அன்னை. ஜயந்தின் துன்புறுத்தலால் ரத்தம் சிந்திய அன்னையைக் கண்டு சினமுற்று எம்பெருமான், கீழே கிடந்த அறுகம்புல் ஒன்றை எடுத்து மந்திரித்து பிரம்மாஸ்திரமாக ஏவ, ஜயந்தனை துரத்தியது அது சீறிவரும் ராமபாணத்தைக் கண்டு அச்சமுற்று அடைக்கலம் தேடி ஓடினான்.

தேவரும், மூவரும், முனிவரும், யாவரும் அவனுக்கு அடைக்கலம் தரவில்லை. அவன் ராமனிடமே சரண் புகுந்தான். அசுரன் கண்ணொன்றை இழந்தான். இந்நிகழ்ச்சியை அனுமன் மற்றுமொரு அடையாளமாகக் கூறினான். இலக்குமணன் சீதையை
விட்டுப் பிரிந்தது;

‘‘மின்னொத்த நுண்ணிடையாய்
மெய்யடியேன் விண்ணப்பம்!
பொன்னொத்த மானொன்று
புகுந்தினிது விளையாட,
நின்னன் பின் வழிநின்று
சிலைபிடித் தெம் பிரானேக,
பின்னே அங் கிலக்குமணன்
பிரிந்ததுமோ ரடையலாம்!’’

வனவாச காலத்தில் ஆசிரம வாழ்க்கையை சந்தோசமாக அனுபவித்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர், ராமனும் சீதையும். ஒரு நாள் ஆசிரமத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மண் மேடையில் அமர்ந்து இருவரும் இயற்கையழகைப் பற்றி அளாவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது மாரீசன் என்ற அரக்கன் அழகிய பொன்மான் உருக்கொண்டு, சீதை பார்க்கும்படியாக, துள்ளி விளையாடிக் கொண்டிருந்தான். சீதாபிராட்டி அப்பொன்மானைக் கண்டு பெரிதும் மயங்கினாள்.

அதன் பொன்னழகு அவளை மிகவும் ஈர்த்தது. அம்மாயமானின் மேல் மிகவும் விருப்பம் கொண்டாள். அம்மானைப் பிடித்து வந்து தன்னுடனே வைத்துக் கொள்ளவும், எப்போதும் அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கவேண்டும் என மிக ஆசைப்பட்டாள். உடனே அதை ராமனிடம் கூறுவதும், அதைப் பிடித்து வாருங்கள் என்று கூறுவதுமாயிருந்தாள். ராமன் அதைப் பிடிக்கத் தாவினான். அச்சம் கொண்டு அது வெருண்டோடியது.

‘சீதையைப் பார்த்துக்கொள்’ என்று கூறிய வண்ணம் விரைந்தோடும் மானைத் தொடர்ந்தோடினான் ராமன். சிறிது நேரத்துக்குப் பிறகு, ‘ஓ, சீதா’ ஓ, லட்சுமணா’ என்ற ராமனின் அபயக்குரல் மட்டும் கேட்டது. அவ்வளவுதான். ராமனுக்கு ஏதோ ஆபத்து என உணர்ந்த சீதை, லட்சுமணனிடம் சென்று பார்த்து வரச் சொன்னாள். ‘தாயே! அது உண்மையான மானல்ல மாயமான். அதை அவர் பார்த்துக்கொள்வார். அவருக்கு ஒன்றும் நேராது கவலைப் படாதீர்கள்’ என்று வலியுறுத்திச் சொல்லியும் ஏற்காத சீதை, சினமொழிகளினால் இலக்குவனைத் திட்டி அவனை விரட்டிவிட்டாள்.

இந்த நிகழ்ச்சியை மென்மையான சோகத்தோடு, சொல்லின் செல்வன் அனுமன் மெதுவாக எடுத்துரைத்தான். அனுமன் கூறிய இந்த அடையாளத்தைக் கேட்ட சீதை அனலிற் பட்ட புழுப்போல துடிதுடித்தான். ‘ஐயகோ, நான் எத்தனை பெரிய தவறிழைத்துவிட்டேன். சின்னவரை எவ்வளவு கேவலமாக நடத்திவிட்டேன்! உத்தம சகோதரரான அவரைத் துச்சமாக மதித்து உதா சினப்படுத்திவிட்டேனே? என்னைப் போன்ற பாவியிருக்கவே இருக்க மாட்டார்கள்.

நானொரு பாவி. படுபாவி, நன்றி கெட்டவள்’ என்று தன்னையே நொந்து கொண்டு முகத்தைத் தன்னிருகரங்களாலும் அறைந்து கொண்டு குலுங்கிக் குலுங்கிக் அழுதாள் சீதை. சீதையின் வேதனையைக் கண்ட அனுமன், ஏதும் செய்ய முடியாமல் சில கணங்கள் சிலையாய் நின்று துக்கித்தான். அது ஒரு தர்ம சங்கடமான நிலை. இருப்பினும் மனோதிடம் வாய்ந்த மாருதி மைந்தன், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு, அண்ணல் ராமபிரான் அளித்த கணையாழியை இரு கைகளிலும் தாங்கி ஏந்திக் கொண்டு, அன்னை சீதையின் முன் மண்டியிட்டுப் பணிந்து,

‘‘மைத்தகுமா மலர்க்குழலாய்!
வைதேவீ! விண்ணப்பம்,
ஒத்தபுகழ் வானரக் கோன்
உடனிருந்து நினைத்தேட,
அத்தகு சீ ரயோத்தியர் கோன்
அடையாள மிவை மொழிந்தான்,
இத்தகையான் அடையாளம்
ஈதவன்கைம் மோதிரமே!’’
– என்று கூறி,

‘‘தாயே! இது அவர் தந்த இனிதான மற்றுமொரு அடையாளம்!’’ என்றான். கடைசி அடையாளமாக, ராமபிரான் தந்த மோதிரத்தைப் பெற்ற சீதை, மகிழ்ந்து
கொண்டாடியது.

‘‘திக்கு நிறை புகழாளன்
தீ வேள்விச் சென்றந் நாள்
மிக்கபெருஞ் சபைநடுவே
வில்லிறுத்தான் மோதிரங்கண்டு,
‘ஒக்குமா லடையாளம்
அனுமான்!’ என்று உச்சிமேல்
வைத்துக் கொண்டு, உகந்தனளால்
மலர்க் குழலாள் சீதையுமே!’’

எண்ணற்ற மக்களும், அவையின் அமைச்சர் பெருமக்களும் கூடியிருக்க, எண் திசையும் போற்றும் வண்ணம் ஜனக மகாராஜாவின் மிதிலை மாநகரில் உள்ள மாபெரும் அரண்மனை மண்டபத்தின் நடுவிலே சிவ தனுசை ஒடித்து, ஜனகன் மகள் ஜானகியைத் திருமணம் செய்து கொண்ட ராமன் விலை மதிப்பில்லாத அழகான “கணை
யாழி’’ ஒன்றை சீதையின் விரலில் பூட்டினான்.

அனுமனிடமிருந்து அக்கணையாழியைப் பெற்றுக்கொண்ட சீதை, முன்பு நடந்த அந்த நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்த சீதை, ‘ராம தூதரே! போதும்போதும் நீர் கொடுத்த அடையாளங்கள் போதும், நான் நம்புகிறேன். நீர்தான் ராமதூதன். என்னை ரட்சிக்க வந்தவன்’ என்று கதறிய வண்ணம் அந்தக் கணையாழியைத் தன் தலை மீது வைத்துக் கொண்டு பேருவகை கொண்டாள் சீதை! பெரியாழ்வார் அருளிச் செய்த ‘‘பெரியாழ்வார் திருமொழியில் ‘மூன்றாம் பத்தின் பத்தாம் திருமொழி ‘‘நெறிந்த கருங்குழல்’’ என்பதாம்.

அத்திருமொழி ஸ்ரீ ராமபிரான் வாக்காக, ‘அசோக வனத்தில் இருக்கும் அன்னை சீதாபிராட்டிக்கு, அவன் தன்னை நம்புவதற்காக, ஸ்ரீ ‘ராமதூதன்’ என்பதை மெய்ப்பிப்பதற்காக சொல்லின் செல்வன் அழகாக எடுத்துக்கூறிய அடையாளங்கள் ஆகும். இதையே பெரியாழ்வார்;

‘‘வாராரும் முலைமடவாள்
வைதேவி தனைக் கண்டு,
சீராரும் திறல் அனுமன்
தெரிந்துரைத்த அடையாளம்,
பாராரும் புகழ்ப் புதுவைப்
பட்டர் பிரான் பாடல் வல்லார்
ஏராரும் வைகுந்தத்
திமையவரோ டிருப்பாரே!’’
– என்கிறார்!

அஞ்சனை மைந்தன் அனுமன் கூறிய அடையாளங்களும், இறுதியாக அவன் தந்த அண்ணலின் கணையாழியும் அத்தனையும் உண்மையே. தன்னை வாழ்விக்க வந்த ‘ராமதூதன்’ அனுமனே என்றுணர்ந்து, மன மிகு மகிழ்ந்து சீதை சந்தோஷம் பொங்க ‘சிரஞ்சீவியாய் இரு’ என வாழ்த்தினாள். வைணவத்தின் வேதமான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் வரும் பெரியாழ்வாரின் புகழ் பெற்ற இந்தப் பாடல் ஒன்றே பாராயணம் செய்யத் தகுந்தது என்று ஆன்றோரும் சான்றோரும் போற்றுகின்றனர்!

டி.எம்.ரத்தினவேல்

The post சீதாபிராட்டிக்கு அனுமன் கூறிய அடையாளங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: