புதன் பட்டத்தையும் தரும் பட்டறிவையும் தரும்

சென்ற இதழில், புதனைப் பற்றி பார்த்தோம். புத்திக்கு உரிய கிரகம் புதன். சிலர் மிகக் கச்சிதமாக காரியங்களைச் செய்து முடிப்பார்கள். முடியும் வரை யாரிடமும் சொல்லவும் மாட்டார்கள். ஆனால், வெற்றிகரமாக முடிந்தவுடன் எப்படி இவரால் திட்டமிட்டு இத்தனை கச்சிதமாக செய்ய முடிந்தது என்று நமக்குத் தோன்றும். அதற்கு காரணம் அவருடைய ஜாதகத்தில் புதன் வலுவாக இருப்பதுதான். ஒன்பது கிரகங்களிலேயே வித்தைக்கும் அறிவுக்கும் அதிபதி புதன். முன்யோசனைக்கு அதிபதி புதன். சகல வித்தைகளிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்றால், புதனின் உதவி அவசியம். எத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும், ஒருவர் தன்னுடைய வாக்கு சாதுரியத்தினாலும், முன்யோசனையினாலும், சமாளித்து வெற்றிகரமாக வெளியே வந்துவிடுவார். இதற்கு புதன் நன்றாக இருக்க வேண்டும்.

புதன் என்பது பெரும்பாலும் சொந்த அறிவைக் குறிப்பது. அவர்கள் மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். அந்த ஆலோசனைகள் தெளிவாகவும், பிரயோஜனம் உடையதாகவும், அவர்களுக்கு உதவி செய்வதாகவும் இருக்கும். அதனால் அவர்களுடைய ஆலோசனையைக் கேட்பதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். இன்னொன்று புதன் வலுத்தவர்கள் பேச்சில் அற்புதமான நகைச்சுவை இருக்கும். அவர்கள் எதையும் ஜாலியாகவும், சிரிப்பு வரும் படியும் பேசுவார்கள். அதே சமயத்தில், மிக நுட்பமான சில விஷயங்களை எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். புதன் தரும்யோகங்கள் குறித்து ஜோதிட நூல்களில் தகவல்கள் உண்டு. ஐந்து முக்கியமான யோகங்களை, “பஞ்சமகாபுருஷ யோகம்’’ என்று ஜோதிட நூல்கள் சொல்லுகின்றது. அதில் மிக முக்கியமான யோகம் “பத்ரயோகம்’’ என்பது. லக்னத்துக்கு கேந்திரத்திலோ திரிகோணத்திலோ ராசிக்கு கேந்திரத்திலோ புதன் நின்றாலும்
புதனுக்கு வலிமை கூடும்.

புதன் வலிமையாக இருந்தால், அவர்கள் மிகச் சிறந்த கல்வியாளர்களாக இருப்பார்கள். அதிகம் படித்து இருப்பார்கள். அதிகபட்டத்தை வாங்கி இருப்பார்கள். ஆராய்ச்சி பட்டத்தை வாங்கி இருப்பார்கள், என்றெல்லாம் சொல்வார்கள் ஆனால், புதன் வலிமையாக இருக்கக்கூடிய சிலருக்கு எந்தப் பட்டங்களும் இருக்காது. “என்ன இவருக்கு புதன் வலிமையாகத் தானே இருக்கிறது. ஆனாலும் இவர் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவராக இருக்கிறாரே, இது எப்படிப் பொருந்தும்?’’ என்று கேட்கலாம். முதலில் ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பட்டம், ஆராய்ச்சி எல்லாம் இப்பொழுது ஒரு நூறு வருடங்களுக்குள் வந்திருப்பதுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரம் பல ஆயிரம் வருடங்களாக இருப்பது. அப்பொழுதெல்லாம் ஒருவர் படித்துவிட்டால் அவருக்கு எந்த பட்டங்களும் கிடைக்காது. எனவே புதன் கிரகத்தின் வலிமையை நேரடியாக கல்விச் சாலைகளில் கிடைக்கும் பட்டங்களோடு இணைத்துப் பார்த்தால், பல நேரங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

அறிவு என்பது, இரண்டு வகைப்படும். ஒன்று தானாகவே சுயம் பாகமாக சுடர்விடும் அறிவு. இன்னொன்று மற்றவர்களிடம் சென்று கேட்பதாலும் படிப்பதாலும் சிந்திப்பதாலும் வருகின்ற அறிவு. இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் படிப்பறிவு, பட்டறிவு அதாவது அனுபவ அறிவு. புதன் வலிமை உடைய ஜாதகர்களைப் பார்த்தோம் என்று சொன்னால், அவர்கள் பள்ளிக்குச் செல்லாதவர்களாக இருந்தாலும்கூட, அவர்களுக்கான அறிவுக் கூர்மையை புதன் கொடுத்திருக்கும் அதன் மூலமாக அவர்கள் பலனை அடைந்திருப்பார்கள். அவர்களுடைய ஆலோசனை மற்றவர்களுக்குப் பயன்படும்.அந்தக் காலத்திலே என்னுடைய உறவினர் ஒருவர், பள்ளிக்கூடம்கூட சென்றது கிடையாது. ஆனால், ஆங்கிலம் நன்றாக பேசுவார். அவரிடத்திலே பல வழக்குகள் வரும். கோர்ட்டுக்கு போகாமலேயே அவர் அந்த வழக்குகளை எல்லாம் சாதுரியமாகப் பேசித் தீர்த்துவிடுவார். அதனால் அவருக்கு “நாட்டு வக்கீல்’’ என்று பெயர் உண்டு. புதனுக்கு அறிவன் என்றுதான் பெயரே தவிர, அவன் பட்டத்தை கொடுப்பான் என்பதை வைத்துக்கொண்டு இணைத்து பார்க்க கூடாது. பலர் படிக்காமலேகூட சில குறுக்கு வழிகளில் பட்டம் வாங்கி இருக்கலாம். அவர்களுக்கு நிச்சயமாக புதன் அடிபட்டிருக்கும். பட்டம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், அந்த குறிப்பிட்ட துறையில் அவர்களுக்கு எந்த நிபுணத்துவமும் இருக்காது என்று அடித்துச் சொல்லிவிடலாம். அவர்களுக்கு அந்த படிப்பு ஒரு பதவியைத் கூட தரலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு வருமானம் தரக்கூடிய இரண்டாம் இடம், உத்தியோக ஸ்தானம், லாபஸ்தானம் முதலியவை பலமாக இருப்பதுதான் காரணம்.

இப்பொழுது சில ஜாதகங்களை நான் உதாரணமாக சொல்லுகின்றேன். பொதுவாகவே, கும்ப லக்னத்திற்கு புதன் லக்ன கேந்திரத்தில் அமைந்துவிட்டால், அவர்கள் நிச்சயம் மிகச் சிறந்த அறிவாளிகளாகவும், குறிப்பாக ஆன்ம அறிவு பெற்றவர்களாகவும், ஜோதிட அறிவு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். உதாரணமாக, ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகத்தில் கும்ப லக்கனத்தில் சூரியனும் புதனும் கூடியிருப்பார்கள். அவர் எந்த கல்லூரிக்கும் சென்று படித்ததில்லை. ஆனால், அவரிடம் பலரும் பாடம் படித்தார்கள். ரமணரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பள்ளிக்கூடம் வேண்டாம் என்று ஓடி வந்தவர். அவர் கன்னி லக்கினம். புதன் சுக்கிரன் மூன்றாவது இடத்தில் இருப்பார்கள். இதில் என்ன விசேஷம் என்று சொன்னால், கன்னி லக்கினத்திற்கு ஒன்பதுக்குரிய சுக்கிரனும் பத்துக்குரிய புதனும் ஒன்றாக இணைந்து இருப்பார்கள்.

இப்படி அமைவது “தர்ம கர்மாதிபதி யோகம்’’ என்று சொல்வார்கள். அந்த யோகம் அவருடைய ஆன்மிக வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையைச் செய்தது. அவருடைய ஆழ்ந்த உபநிஷத் விஷயங்கள், அத்வைத விஷயங்கள் இவற்றையெல்லாம் கவனித்துப் பார்த்தால், அவைகள் புதன் தந்த அறிவுச் சொத்துக்கள் என்ற முடிவுக்கு வரலாம்.லக்னத்திற்கு 12ல் புதன் அமர்ந்தால் வேலை செய்யுமா? நிச்சயமாக வேலை செய்யும். நல்ல அனுபவ அறிவைத் தரும். என்னுடைய தமையனார் ஜாதகத்தில் 12ஆம் இடத்தில் சூரியன் புதன். அவர் விருச்சிக லக்கினம். அஷ்டமாதிபதி புதன் 12ல் நின்றதால் கல்வி அறிவை அதாவது கல்லூரிக்குச் சென்று படிக்கும் கல்வி அறிவைக் குறைத்து, அனுபவ அறிவைத் தந்தது. எனவே புதன் பட்டத்தை மட்டும் தருவார் அல்ல. பட்டறிவையும் தந்து முன்னேற வைப்பார்.

 

The post புதன் பட்டத்தையும் தரும் பட்டறிவையும் தரும் appeared first on Dinakaran.

Related Stories: