முன்னே முருகன்;பின்னே சிவன்!

திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் கொடி ஏற்றியவுடன் திருநாவுக்கரசர் வீதியுலா எழுந்தருளி, தெரு எல்லாம் சுத்தமாக இருக்கிறதா? உழவாரப் பணி செய்து வருகிறார்களா? என்று பார்வையிடுவார். இத்திருவிழாவில் முருகப் பெருமான் வெட்டிவேர் சாத்தி (சிவன் அம்சம்), வெள்ளை சாத்தி (பிரம்மன் அம்சம்), பச்சை சாத்தி (பெருமாள் அம்சம்), சிவப்பு சாத்தி (அம்பாள் அம்சம்) என எல்லா தெய்வங்களுமாக விளங்கும் அற்புதம் வேறெங்கும் காணக் கிடைக்காதது. சிக்கல் கோயிலில் நடப்பது போல்், இங்கே, சுவாமி சேர்க்கை என்ற நிகழ்வில் முருகனுக்கு வியர்த்துக் கொட்டுவதைக் கண்கூடாகக் காணலாம். முருகப் பெருமான் முன்பக்கமும், சிவபெருமான் பின் பக்கமும் ஒரே சப்பரத்தில் எழுந்தருள்வது கூடுதல் சிறப்பு.

20 தேவதைகளுடன் இறைவன்

இருபது கோஷ்ட தேவதைகளைக் கொண்ட சிவன் சந்நதி இருப்பது திருவானைக்
காவல் கோயிலில் மட்டும்தான் என்றே சொல்லலாம். மேற்கு கோஷ்டத்தில் நரசிம்மர், மகாலட்சுமி, கணபதி, சரஸ்வதி, கிருஷ்ணர், வடக்கு கோஷ்டத்தில் தத்தாத்ரேயர், ஹரிஹரர், அர்த்தநாரீஸ்வரர், ஏகபாதர், சண்டேசுவரர்; கிழக்கு கோஷ்டத்தில் சக்ரவரதர், பிட்சாடனர், கௌரிசங்கர், சோமாஸ்கந்தர், சுகாஸன சந்திரசேகர். தெற்கு கோஷ்டத்தில் பைரவர், ஜுரஹரதேவர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், வீரபத்ரர் ஆகியோர் அருள்வது வேறெந்தக் கோயிலிலும் காணக் கிடைக்காத அற்புதம்.

கல்யாணம் நடத்தி வைக்கும் கந்தன்

திருச்சி புகைவண்டி சந்திப்பிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள எஸ்.எம்.ஈ.எஸ். காலனியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மேல் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேற இந்த கல்யாண பாலசுப்ரமணியர் அருள்புரிகிறார். அதோடு குழந்தைப்பேறு, விரும்பிய கல்வி, வேலை, ஆரோக்ய அபிவிருத்தி, கடன் தொல்லையிலிருந்து விடுபடல் எனப் பல்வேறு நற்பலன்களையும் அருள்கிறார் இவர்.

யானைமலையில்கொடிமரம் இல்லை

யோக நரசிம்மர் தாயார் நரசிங்கவல்லியோடு அருளாட்சிபுரியும் கோயில் மதுரை ஒத்தக்கடை, யானைமலையில் உள்ளது. இத்தலம் சுமார் 2000 வருடங்கள் பழமையானது. இங்கு பௌர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது. பிரதோஷ வழிபாடும் நடைபெறுகிறது. கோயில் தீர்த்தத்தில் மாசி பௌர்ணமியன்று கஜேந்திரமோட்ச லீலை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. குடைவரைக் கோயிலில் உள்ள நரசிம்மர்களிலேயே பெரிய உருவம் கொண்டவர் இவர். கொடி மரம் இல்லை. கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள, அகல அளவைப் பொறுத்தே கொடிமரம் வைப்பது வழக்கம். இத்தலத்தில் கருவறைக்கு மேல் யானைமலை மிகவும் உயர்ந்தது என்பதால் கொடிமரம் இல்லை என்கிறார்கள்.

பாறையில் பாதம்

சென்னை, மாங்காடு வெள்ளீஸ் வரர் சந்நதியில் சாளரம் வழியாக சிவனை தரிசிக்கலாம். சாளர எதிரில் நந்தி உள்ளது. இரண்டுக்கும் இடையில் தேவியின் இருபாதங்கள் பாறாங்கல்லில்
பொறிக்கப்பட்டுள்ளது.

நாகலட்சுமி

The post முன்னே முருகன்;பின்னே சிவன்! appeared first on Dinakaran.

Related Stories: