உடுமலை, டிச.30: உடுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம், காய்கறி பயிரிட்டுள்ளனர். திருமூர்த்தி அணையில் இருந்து 2ம் மண்டல பாசனத்துக்கு கடைசி சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பயிர்கள் நன்கு வளர்ந்து காய்பிடித்துள்ளன. மேலும் பல விவசாயிகள் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை தின்று நாசப்படுத்துகின்றன.
நேற்று முன்தினம் ராகல்பாவி பிரிவு பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் மக்காச்சோளத்தை தின்று துவம்சம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயி காளிமுத்து கூறியதாவது: 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளேன். பருவமழையால் பயிர்கள் நல்லமுறையில் வளர்ந்து பூத்து மக்காச்சோள கதிர்களில் மணிகள் பிடித்துள்ளன.
காட்டுப்பன்றி அட்டகாசம் பற்றி வனத்துறையினிரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். காட்டுப்பன்றி தாக்குதால் முதலீட்டு தொகையை கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post உடுமலை பகுதியில் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகள் appeared first on Dinakaran.