பல்லாவரம் அருகே உள்ள கடைகளில் போலீஸ் சீருடை அணிந்து வசூல் போலி எஸ்ஐ சுற்றிவளைத்து கைது: வீடியோ வைரல்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபர் ஒருவர், ‘‘உங்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனால் உங்களது கடைகளில் சோதனை செய்ய வேண்டும். அவ்வாறு சோதனை செய்யாமல் இருக்க, எனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்’’ என்று கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அப்பகுதி வியாபாரிகள் இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்தபோது, அவர், தான் ஒரு எஸ்.ஐ என்றும், எப்படி எனது யூனிபார்ம் மேல் கை வைக்கலாம் என்றும் கூறி, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், தனது கேம்ப் ஆபீசரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறி நைசாக தப்பிச் செல்ல முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரது யூனிபார்மில் தமிழக அரசு முத்திரை மற்றும் எஸ்ஐ பதவிக்கான ஸ்டார் ஆகியவை இல்லாததால் அவர் போலி எஸ்ஐ என்பதை உறுதி செய்து, அவரை கைது செய்து சங்கர்நகர் காவல் நிலையம் அழைத்து சென்று முறைப்படி விசாரணை நடத்தினர். அதில் அவர், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு பகுதியைச் சேர்ந்த முரளி (40) என்பதும், இவர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுந்து பிரிந்து வருவதும் தெரிய வந்தது.

இவர், இது போன்று ஏற்கனவே போலீஸ் எனக் கூறி ஒரு சில கடைகளில் இருந்த வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்துச் சென்றதை விசாரணையில் ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக இது போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post பல்லாவரம் அருகே உள்ள கடைகளில் போலீஸ் சீருடை அணிந்து வசூல் போலி எஸ்ஐ சுற்றிவளைத்து கைது: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: