* தங்க இடமின்றி தவிக்கும் பக்தர்கள்
ராமேஸ்வரம் : அரையாண்டு விடுமுறைக்கு ராமேஸ்வரத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால், தங்கும் விடுதிகளில் இரண்டு மடங்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நாட்டின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் விளங்கி வருகிறது. இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் ஏராளமான பக்தர்கள் தீர்த்த கடல் மற்றும் கோயில் உள்ளே 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்து செல்கின்றனர்.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் ராமேஸ்வரத்திற்கு தற்போது அரையாண்டு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால் சுற்றுலா வாகனங்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டமாக நிறைந்து காணப்படுவதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றி வாகன போக்குவரத்தை சீர் செய்கின்றனர்.
இதனால் கூட்ட நாட்களில் அனைத்து விதமான கனரக வாகனங்களும் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தடுத்து வைக்கப்படும். கோயில், தனுஷ்கோடி செல்ல உள்ளே வரும் சுற்றுலா கார்கள், வாகனங்கள், ஆட்டோக்கள், உள்ளூர் சுற்றுலா வேன்கள் அனைத்தும் திட்டக்குடி சந்திப்பு சாலை வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்னி தீர்த்தக் கடற்கரை, கோயில் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் நகர், சல்லிமலை, சிவகாமி நகர் வழியாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் சேர்கின்றன. தனுஷ்கோடியில் இருந்து திரும்பி வரும் வாகனங்கள் 6 நம்பர் லையன், ரயில்வே பீடர் ரோடு, வன்னார்தெரு, ராமர் தீர்த்தம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சேர்கிறது.
இதனால் சுற்றுலா வாகன நெரிசல்கள் ஒரளவு குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சொந்த வாகனங்களில் கூகுள் மேப் பார்த்து வரும் சுற்றுலா பயணிகள் தெரு சாலைகளுக்குள் சென்று வாகனங்களில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக பொந்தம்புளியில் இருந்து தீட்ச்சிதர் கொல்லை, ரயில்வே வடக்கு, காந்தி நகர், அண்ணா நகர் தெரு சாலையில் கார்களும் ஆட்டோக்களும் எதிர் எதிராக சென்று கடும் நெருக்கடி ஏற்பட்டு சிக்கி செல்கின்றனர். முக்கிய சாலைகள் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெருக்களுக்குள் ஆட்டோக்கள் அதிகளவில் செல்கின்றன. இதனால் உள்ளூர்வாசிகள் எரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளை நம்பி வருகின்றனர். தொடர் விடுமுறையை மையப்படுத்தி இங்குள்ள சில தனியார் விடுதிகள், லாட்ஜ்கள், தங்கும் ஹோட்டல்கள் சிண்டிகேட் அமைத்து இணைய தளத்தில் மொத்த ரூம்களை லாக் செய்து விட்டு நேரில் வரும் யாத்திரிகர்களிடம் ரூம் புல் என டிமாண்ட் ஏற்படுத்தி சாதாரண நாட்களில் ரூ.1800 வாடகை உள்ள டபுள் பெட் ஏசி ரூம் ரூ.5500க்கு வாடகை விடப்பட்டது.
இதேபோல் தரத்திற்கு ஏற்றால் போல் மூன்று மடங்கு வரை உயர்த்தி தங்கும் அறைகள் வாடகைக்கு விடப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகளும், பக்தர்களும் பெரும் சி ரமத்திற்கு ஆளாகி இதில் ஒருசில தங்கும் விடுதிகள் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு வழக்கமான வாடகை கட்டணத்திற்கு யாத்திரைகளுக்கு ரூம் கொடுத்தனர்.
அதேபோல் ஒரு வழிப் பாதையை காரணம்காட்டி ஒரு சில ஆட்டோக்களை தவிர்த்து பெரும்பாலான ஆட்டோக்கள் கட்டணமும் இரண்டு மடங்காக வசூல் செய்தனர். ஒரு கி.மீ தூரம் செல்லும் இடத்திற்கு சிறிய ஆட்டோவிற்கு ரூ.200, பெரிய ஆட்டோவிற்கு ரூ.250 என வாடகை வசூல் செய்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் பக்தர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
ராமேஸ்வரம் கோயிலை சுற்றியுள்ள ஒரு சில உணவகங்கள், டீக்கடைகளில் யாத்திரைகளுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கிழக்குவாசல் அருகே உள்ள டீ கடை ஒன்றில் ரூ.10க்கு விற்கபடும் ஒரு உளுந்தவடை ரூ.20க்கு விற்கப்பட்டது. மிகுந்த பசியில் வடை சாப்பிட்ட பக்தர்கள் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். கூட்ட நேரங்களில் விலையை உயர்த்தி வியாபாரம் செய்யும் டீக்கடைகள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் நடவடிக்கை தேவை
விடுமுறை நாட்களில் ராமேஸ்வரத்திற்கு தங்கும் நிலையில் வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் முன்னதாக தங்களின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு தங்குவதற்கான வசதிகளை உறுதி செய்து விட்டு பயணம் செய்வது சிறந்தது என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக மாறியுள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கூடுதல் வாடகை கட்டணம் வசூல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் தங்கி செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post விடுமுறையால் குவியும் கூட்டம் ராமேஸ்வரத்தில் விடுதிகளில் இரண்டு மடங்கு கட்டணம் appeared first on Dinakaran.