இந்தியாவை தலைநிமிர வைத்த நிதிஷ் தனி ஒருவன்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 4வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 122.4 ஓவரில் 474 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 46 ஓவருக்கு 5 விக்கெட் இழந்து 164 ரன் எடுத்திருந்தது. 3வது நாளான நேற்று களத்தில் இருந்த ரிஷப் 28 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன் பிறகு வந்த நிதிஷ் ரெட்டியுடன் இணை சேர்ந்த ஜடேஜா சிறிது நேரம் தாக்குப்பிடித்தார்.

அவர் 17 ரன்னில் வெளியேறிய போது இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 221ரன் என்ற பரிதாப நிலையில் தவித்தது. மேலும் ‘ஃபாலோ ஆனை’ தவிர்க்க இன்னும் 54 ரன் தேவைப்பட்டது. அப்போது இணை சேர்ந்த நிதிஷ்குமார், வாஷிங்டன் சுந்தர் இருவரும் பொறுப்புணர்ந்து ஆஸி பந்தை பதம் பார்க்க ஸ்கோர் உயர்ந்தது. நிதிஷ் தனது முதல் அரைசதத்தை கடந்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த வாஷிங்டன் 50 ரன்னை எட்டியபோது அவுட்டானார். இருவரும் 8வது விக்கெட்டுக்கு 127 ரன் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்தனர்.

அடுத்து வந்த பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார். சிறிது நேரத்தில் பவுண்டரி அடித்து தனது முதல் டெஸ்ட் சதத்தை கடந்தார் நிதிஷ். தொடர்ந்து நிதிஷ் 105, சிராஜ் 2 ரன்னுடன் இருந்த போது மழை குறுக்கிட்டு 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது இந்தியா 116 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்திருந்தது. ஆஸியை விட 116 ரன் பின் தங்கிய நிலையில் 4வது நாளான இன்று இந்தியா முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

தலையாய் ஆடிய வால்
* ஆஸ்திரேலியாவில் 8 அல்லது அதற்கு குறைவான வரிசையில் களமிறங்கி அதிக ரன் குவித்த இந்திய இணைகள்:

* 2008(சிட்னி) – சச்சின்-ஹர்பஜன் சிங் – 129 ரன்

* 2024(மெல்போர்ன்) – நிதிஷ்-வாஷிங்டன் – 127 ரன்

* 2008(அடிலெய்டு) – அனில் கும்ப்ளே-ஹர்பஜன் – 107 ரன்

* ஆஸியில் 8 அல்லது அதற்கு குறைவான வரிசையில் களம் கண்டு அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலிலும் நிதிஷ் இணைந்துள்ளார்.

* சின்ன வயசு… சாதனை பெரிசு!
ஆஸ்திரேலியாவில் குறைந்த வயதில் சதம் விளாசிய இந்தியர்கள் பட்டியலில் நிதிஷ்குமார் 3வது இடத்தை பிடித்தார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்(18 ஆண்டுகள் 256 நாட்கள், 1992), ரிஷப் பண்ட் (21ஆண்டுகள் 92 நாட்கள், 2019), நிதிஷ் குமார்(21ஆண்டுகள் 216 நாட்கள், 2024), தத்து பட்கர்(22ஆண்டுகள் 46நாட்கள், 1948) ஆகியோர் உள்ளனர்.

The post இந்தியாவை தலைநிமிர வைத்த நிதிஷ் தனி ஒருவன்! appeared first on Dinakaran.

Related Stories: