டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள்; 2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்கள்: முழு பட்டியல் விவரம்

மும்பை:2024ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தாலும், இறுதி கட்டங்களில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் 2025ம் ஆண்டு இந்திய அணி 18 டி20 போட்டிகள், 10 டெஸ்ட் போட்டிகள், 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதைத் தவிர சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்தியா 3 போட்டிகளில் விளையாடுகிறது. 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனவரி 3ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிட்னியில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு ஜனவரி 22ம் தேதி இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா தகுதி பெற்றால் விளையாடும். அதன் பிறகு ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பின்னர் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, அங்கு 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதனையடுத்து அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் அக்டோபர், நவம்பர் மாதம் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து நவம்பர் மாதம் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு; கவாஸ்கர் அறிவுரை
மும்பை: இந்திய அணியின் மாஜி கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், “இந்திய அணியில் புதுமுக வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்கான முடிவை தேர்வு குழுவினர் எடுக்க வேண்டும். தேர்வு குழுவினர் எதிர்பார்த்தபடி சீனியர்கள் செயல்படவில்லை. ரன்கள் குவிக்க வேண்டியது டாப் ஆர்டர்களின் கடமை. அவர்கள் அதை செய்யவில்லை என்றால் கீழ் வரிசையில் உள்ள வீரர்களை குறை சொல்வது மிகமிக தவறு. சீனியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாடுவதில்லை. மெல்போர்ன் டெஸ்டில் 5வது நாள் முழுவதும் பேட்டிங் செய்திருந்தாலே, இந்திய அணி டிரா செய்திருக்கும். ஆனால் இந்தியா தோல்விக்கான வழியை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டது’’ என்றார்.

The post டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள்; 2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்கள்: முழு பட்டியல் விவரம் appeared first on Dinakaran.

Related Stories: