டெல்லி வந்த 2 பிலிப்பைன்ஸ் பயணிகளின் வயிற்றுக்குள் ரூ17 கோடி மதிப்பிலான போதை பொருள்: சுங்கத்துறை அதிரடி பறிமுதல்


புதுடெல்லி: டெல்லி வந்த 2 பிலிப்பைன்ஸ் பயணிகளின் வயிற்றுக்குள் ரூ17 கோடி மதிப்பிலான போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 156 கோகோயின் போதைப் பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்களை வயிற்றுக்குள் மறைத்து வைத்திருந்த இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டினரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையம்-3ன் வருகை மண்டபத்தின் வழியாக வந்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சந்தேகத்திற்கிடமான இருவரை பரிசோதித்தோம். அவர்களை தடுப்பு அறையின் கழிப்பறையில் வைத்து பரிசோதித்தோம். அப்போது ஒரு பயணிக்கு பேதி மாத்திரை கொடுத்த போது அவரது வயிற்றில் மறைத்து வைத்திருந்த 35 கோகோயின் போதைப் பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்கள் வெளியே வந்தன. உடனடியாக அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தியதில் மேலும் 31 கோகோயின் போதைப் பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்கள் வெளியே எடுக்கப்பட்டது. இந்த பயணியிடமிருந்து மொத்தம் 66 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன. இதன் எடை 503 கிராம்.

மற்றொரு பயணியிடம் சோதனை நடத்தியதில் 77 காப்ஸ்யூல்கள் வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. இந்த பயணியிடமிருந்து மொத்தம் 90 காப்ஸ்யூல்கள் மீட்கப்பட்டன. இதன் எடை 676 கிராம். மேற்கண்ட இரு பயணிகளிடம் இருந்து 156 கிராம் கோகோயின் போதைப் பொருள் நிரப்பப்பட்ட காப்ஸ்யூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.10.14 கோடியாகும். இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இருவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ. 17 கோடி. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பாங்காக்கிலிருந்து அடிஸ் அபாபா வழியாக டெல்லிக்கு வந்தனர். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

The post டெல்லி வந்த 2 பிலிப்பைன்ஸ் பயணிகளின் வயிற்றுக்குள் ரூ17 கோடி மதிப்பிலான போதை பொருள்: சுங்கத்துறை அதிரடி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: