எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்: நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசிய பின் தந்தை நெகிழ்ச்சி பேட்டி

மெல்போர்ன்: மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு நாயக பேட்டர் உருவான நாள் இன்று என்றால் அது மிகையல்ல. இந்திய அணி இன்று காலை 191/6 என்று இருந்த போது களமிறங்கினார் நிதிஷ் குமார் ரெட்டி, ஆட்டம் முடியும் போது இந்திய அணி 358/9. நிதிஷ் குமார் 105 நாட் அவுட். வாஷிங்டன் சுந்தர் (50) உடன் இணைந்து இருவரும் 127 ரன்களை 8வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது மெல்போர்னில் இந்தியாவின் 3வது பெரிய 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும். 191/6 என்ற நிலையிலிருந்து பிறகு 221 வரை சென்ற போது ஜடேஜா நேதன் லயனிடம் எல்.பி. ஆக 221/7 என்று இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தில் இருந்தது, அந்த முதல் தடையை நிதிஷ் குமாரும் வாஷிங்டனும் கடந்தனர்.

நிதிஷ் குமார் இந்தத் தொடரில் இந்திய அணி நெருக்கடிகளில் இருக்கும் போதெல்லாம் தன் விளாசல்கள் மூலம் கைகொடுத்துள்ளார், ஆனால் இன்று அவர் எடுத்த சதம் உண்மையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலம் பேசப்படும் சதமாக இருக்கும் என்பதில் இருவேறு கருத்தில்லை. அரைசதம் எடுத்து முடித்தவுடன் மெகா ஹிட் படம் புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுன் செய்வதைப் போல் செய்தார். சதம் எடுத்தவுடன் மட்டையில் ஹெல்மெட்டை மாட்டி வைத்து ஒரு காலை முழந்தாளிட்டு சதத்தைக் கொண்டாடியது பாகுபலி ஸ்டைலாக இருக்கலாம். நிதிஷ் குமார் சதம் எடுக்கும் போது சரியாக 99 ரன்களில் இருந்த போது பும்ரா கமின்ஸிடம் ஆட்டமிழக்க 9 விக்கெட்டுகள் விழுந்து விட்டன, கமின்ஸுடைய மீதமுள்ள 3 பந்துகளில் சிராஜ் தாங்குவாரா, நிதிஷ் சதமெடுப்பாரா என்று மைதானமே திக் திக் கணங்களில் மூழ்கியிருந்தது.

மைதானத்தில் நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை முத்யாலா ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு பட்டாளமே டென்ஷனில் எழுந்திருப்பதும் உட்காருவதுமாக பதற்றத்துடன் காணப்பட்டனர். எப்படியோ கமின்ஸின் ஓவரை சிராஜ் தடுத்தாடி விட, அடுத்து போலண்ட் வீச வந்தார் அவரது பந்தை நேராக தூக்கி அடித்து சதம் கண்டார் நிதிஷ் குமார் ரெட்டி. இந்த இன்னிங்ஸ் நம் அணியின் சூப்பர் ஸ்டார்-செல்வந்த பேட்டர்களுக்கு எப்படி ஆட வேண்டும் என்ற பாடமாக அமைந்தது. வாஷிங்டன் சுந்தரும் அதியற்புதமான டெஸ்ட் இன்னிங்ஸை ஆடினார். ரிஷப் பண்ட் அனாவசியமாக ஒரு ஷாட்டைத்தேர்வு செய்து டீப்பில் சிக்கினார்.

அந்த ஷாட் அந்தச் சமயத்தில் தேவையில்லை. எப்படி நேற்று ஜெய்ஸ்வால் அந்த ரன்னுக்காக ஓடி ரன் அவுட் ஆக வேண்டியதில்லையோ அதே போல்தான் இந்த அவுட்டும் விக்கெட்டை ஆஸ்திரேலியாவுக்குத் தாரை வார்த்த தருணமாகும். நிதிஷ் குமார் எந்த ஒரு தவறையும் செய்யாமல் ஆடினார். பிட்சில் ஒன்றும் இல்லை என்பதால் எதற்காக தூக்கி எறியவேண்டும் என்று மன உறுதியுடன் விட வேண்டிய பந்துகளை விட்டும், ஆட வேண்டிய பந்துகளை ஆடியும் அனைத்திற்கும் மேலாக ஆஸ்திரேலியாவின் துல்லியத் தாக்குதல் பந்து வீச்சின் சோதனைகளையும் கடந்து அட்டகாசமான டெஸ்ட் சதம் ஒன்றை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் கண்ட 3-வது வீரர் என்ற பெருமையை எட்டினார் நிதிஷ் குமார். மைதானத்தில் அவரது தந்தையிடம் உடனேயே ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வர்ணனையிலிருந்த ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி காண வந்தார். எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. 14-15 வயது முதலே நன்றாக ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகிறான். உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள், சிறப்பான உணர்வைத் தந்த நாள்.” என்றார். உடனே கில்கிறிஸ்ட், 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்றார்.. அதற்கு நிதிஷின் தந்தை, “ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன் என்றார். ஒரு விக்கெட்தான் இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்” என்றார்.

The post எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்: நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசிய பின் தந்தை நெகிழ்ச்சி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: