சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: அரக்கோணம் சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். நெமிலி அருகே இன்று அதிகாலை பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் போலீஸ்காரர் இறந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளம்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் செந்தில்வேல்(34). இவரது மனைவி புஷ்மிதா. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செந்தில்வேல் சென்னையில் உளவுப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவர் தினமும் தனது வீட்டில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சென்று அங்கிருந்து ரயிலில் பணிக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை வீட்டில் இருந்து அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு பைக்கில் புறப்பட்டார். நெமிலி அடுத்த ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே அதிகாலை 4 மணியளவில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிய வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

உள்வட்டப் பாதுகாப்புப் பிரிவில் ஹவில்தாராகப் பணிபுரிந்து வந்த L.செந்தில்வேல் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். உள்வட்டப் பாதுகாப்புப் பிரிவு ஹவில்தார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

செந்தில்வேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

The post சாலை விபத்தில் இறந்த உள்வட்ட பாதுகாப்பு பிரிவு ஹவில்தாரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: