சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அதிமுக, பாஜவினர் கைது

சென்னை: சென்னையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜவினர் நேற்று கைது செய்யப்பட்டனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், போலீசார் போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதலே அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க வந்த பாஜவினரை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், பாஜவினருக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், போராட்டத்திற்கு வந்த அக்கட்சியின் துணை தலைவர் கரு.நாகராஜன் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்தனர். அப்போது தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ‘‘பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடிய ஆர்வத்தை இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு காவல்துறையினர் அக்கறை காட்டவில்லை” என்றார்.

இதேபோல அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சாலையில் அமர்ந்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தால் கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அதிமுக, பாஜவினர் கைது appeared first on Dinakaran.

Related Stories: