சேலம்: சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த 35 வயது கொண்ட இளம்பெண், அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிவிட்டு, தற்போது மிரட்டி வரும் ஏத்தாப்பூர் தும்பல் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார். சாதி ரீதியாக திட்டி மிரட்டி வருவதாக புகார் தெரிவித்திருந்ததால், உதவி கமிஷனர் செல்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அப்பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு முன்பே அற்புதராஜ் காதலித்துள்ளார். இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
பிறகு திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்து, அப்பெண்ணுடன் தொடர்பை அற்புதராஜ் துண்டித்துள்ளார். இதனால், அப்பெண்ணின் பெற்றோர், கடந்த 10 ஆண்டுக்கு முன் வேறு நபரை பார்த்து திருமணம் செய்துகொடுத்துள்ளனர். 9 வயதில் மகன் இருக்கிறான். இச்சூழலில் அப்பெண்ணை மீண்டும் பார்த்த அற்புதராஜ், நெருங்கி பழகி தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்தால், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மீண்டும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரை நம்பிய இளம்பெண்ணும் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, அற்புதராஜிடம் வந்துள்ளார். அப்போது அவர், நீ வேறு சாதி என்பதால் திருமணம் செய்ய இயலாது எனக்கூறி, சாதி பெயரை சொல்லி திட்டி கொலைமிரட்டல் விடுத்து விரட்டியடித்துள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து அற்புதராஜ், அவரது பெற்றோரான அர்த்தனாரி, சகுந்தலா ஆகியோர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அற்புதராஜை (31) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ‘கணவரிடம் விவாகரத்து பெற வைத்தார்’; திருமணம் செய்வதாக கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய வாலிபர் கைது appeared first on Dinakaran.