செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்திருந்த பைக்கை திருடி காதலியுடன் சுற்றி திரியும் வாலிபர்: வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்திருந்த பைக்கை திருடிய வாலிபருடன் சுற்றி திரிவதாக வீடியே ஆதாரத்துடன் பைக்கின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் குருசேவ், மகேந்திரா சிட்டி பகுதியில் பணிபுரிந்து வருகிறார். இவர், செங்கல்பட்டு பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில், குருசேவ் கடந்த 4ம் தேதி சொந்த ஊர் செல்ல செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை, கட்டண வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தியுள்ளார். ரயில் மூலம் சொந்த ஊர் சென்று, மீண்டும் செங்கல்பட்டுக்கு 9ம் தேதி திரும்பியுள்ளார். தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல வந்தபோது இருசக்கர வாகனம் தொலைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இருசக்கர வாகனம் கிடைக்காததால் 10ம் தேதி, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வாகனம் தொலைந்து விட்டதற்காக புகார் அளித்திருந்தார். இந்தநிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செங்கல்பட்டு நகர் பகுதியில் குருசேவ் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருடைய இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் ஒரு இளம் பெண்ணுடன் பயணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை வீடியோ எடுத்துக் கொண்டே அவரை ஓரம் நிறுத்தி வாகனம் குறித்து விசாரித்தவுடன், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்த இளைஞர் வாகனத்தை வேகமாக திருப்பி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். இந்த வீடியோ ஆதாரத்தை காவல் நிலையத்திற்கு ஒப்படைத்து வாகனத்தை மீட்டு தருமாறு குருசேவ், காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

The post செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்திருந்த பைக்கை திருடி காதலியுடன் சுற்றி திரியும் வாலிபர்: வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: