மது அருந்த பணம் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட செல்போன் கடைக்காரர்: கூட்டாளியுடன் சிக்கினார்

துரைப்பாக்கம்: கொளத்தூர் நேர்மை நகரை சேர்ந்தவர் தாரா (47). ஐ.சி.எப் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி உடல்நிலை சரியில்லாததால், மாத்திரை வாங்குவதற்காக வீட்டின் அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், தாரா கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை பறித்தனர். சுதாரித்துக் கொண்ட தாரா, செயினை கையால் பிடித்துக் கொண்டார். இதனால், செயின் 2 துண்டுகளாக அறுந்து, ஒரு பாதி செயினுடன் கொள்ளையர்கள் தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கொளத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, பைக் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அதில், அழிஞ்சிவாக்கம் வடகரை மேட்டு தெருவை சேர்ந்த அஜித்குமார் (26) என்பவரை நேற்று முன்தினம் இரவு பிடித்தனர். இவர், அதே பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருவதும், அதே பகுதியை சேர்ந்த பட்டறை ஊழியர் சுதாகர் (30) என்பவருடன் சேர்ந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிந்தது.

இருவரையும் கைது செய்தனர். சம்பவத்தன்று மது போதையில் தனது நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு கொளத்தூர் வழியாக சென்றபோது, மது அருந்த பணம் இல்லாததால் செயின் பறித்துள்ளனர். அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் மற்றும் போலீஸ் இல்லாததாலும், தாங்கள் இந்த ஏரியா இல்லை. மீண்டும் இந்த பகுதிக்கு வரப்போவதில்லை என்பதால் போலீசார் தங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து செயின் பறித்துள்ளனர். இதையடுத்து அஜித்குமார் மற்றும் சுதாகர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மது அருந்த பணம் இல்லாததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட செல்போன் கடைக்காரர்: கூட்டாளியுடன் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: