மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த மும்பை மருந்து நிறுவன உரிமையாளர் புனேவில் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கொரியர் மூலமாக போதை மாத்திரைகளை சப்ளை செய்த மும்பையை சேர்ந்த மருந்து நிறுவன உரிமையாளரை, புனேவில் பெரும்புதூர் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்தில் கல்லூரி மணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யபடுவதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், பெரும்புதூர் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த செய்த 3 பேரை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், மும்பையில் இருந்து பெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு போதை மாத்திரை அடிக்கடி கொரியர் வருவதும், அதனை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இந்த, தகவலின்பேரில் போலீசார், அனுப்புநர் முகவரியை வைத்து விசாரித்ததில் மும்பையை சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரைகள் வரும், இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதானந்த் பாண்டே என்பவர் சப்ளை செய்துள்ளதையும் போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அதன்படி, போலீசார் மும்பையில் இருந்து தலைமறைவாகிய சதானந்த் பாண்டேவை, போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், சதானந்த் பாண்டே மும்பை அடுத்த புனேவில் தலைமறைவாக இருப்பது, போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது. இதனையடுத்து, புனேவிற்கு விரைந்து சென்ற போலீசார், மருந்து நிறுவன உரிமையாளர் சதானந்த் பாண்டேவை கைது செய்து, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு அழைந்து வந்தனர்.பின்னர், பெரும்புதூர் காவல் நிலையத்தில் வைத்து, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு மாநிலங்களில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததும், குறிப்பாக பெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை அதிகளவில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து கைதான சதானந்த் பாண்டே மீது வழக்குபதிவு செய்த போலீசார், பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து, பின்னர் பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த போதை மாத்திரை விற்பனை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த மும்பை மருந்து நிறுவன உரிமையாளர் புனேவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: