ஆண்டிபட்டியில் ஒரு ‘சதுரங்க வேட்டை’ பித்தளை செம்புக்கு பெயின்ட் அடித்து இரிடியம் என ரூ.9.50 லட்சம் மோசடி: 2 பேருக்கு வலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சதுரங்க வேட்டை பட பாணியில், ரூ.9.50 லட்சம் வாங்கிக்கொண்டு இரிடியம் என கூறி பித்தளை செம்பை வண்ணம் பூசி கொடுத்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் இருந்து இரண்டு கார்களில் இரிடியம் கடத்தி வருவதாக ஆண்டிபட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனியிலிருந்து வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். காரில் இருந்த பெட்டியை திறக்க முயன்றபோது, காரில் வந்தவர்கள் அந்தப் பெட்டியில் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து 2 கார்களில் வந்த பெண் உள்பட 7 பேரை ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார் (56). இவரது நண்பர் அருண்குமார் மூலமாக, தேனியை சேர்ந்த குமார் தொடர்பு கொண்டு, ‘என்னிடம் இரிடியம் உள்ளது. அதனை வாங்கி வெளியில் விற்றால் ரூ.5 கோடி வரை வருமானம் பார்க்கலாம்’ என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கிடையில், ராஜேஷ் என்பவர் ஜஸ்டின் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு, ‘‘இரிடியம் இருந்தால் கொண்டு வாருங்கள். ரூ.5 கோடி வரை நான் விற்பனை செய்து தருகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து குமாரிடம், ஜஸ்டின் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ரூ.10 லட்சம் கொண்டு வந்தால் வாங்கித் தருவதாக குமார் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி, ஜஸ்டின் ஜெயக்குமார் தனது நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார். ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் நின்றிருந்த குமாரை சந்தித்து ரூ.9.50 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு இரிடியம் வாங்கி வருவதாக சென்ற குமார் சிறிது நேரத்தில் ஒரு பெட்டியுடன் வந்துள்ளார்.

அதே நேரத்தில் ராஜேஷ் என்பவரும் அங்கு வந்துள்ளார். அந்த பெட்டியை திறந்து பார்த்த ராஜேஷ், இது இரிடியம் தான் எனக் கூறினார். பின்னர், ‘‘பெட்டியுடன் மதுரைக்கு வாருங்கள். அங்கு விற்பனை செய்து தருகிறேன்’’ என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, அனைவரும் மதுரையை நோக்கி புறப்படும்போது போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினர். அப்போது பின்னால் காரில் வந்த குமார், ராஜேஷ் தப்பி ஓடிவிட்டனர்.

காவல்நிலையத்தில் அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட செம்பு இருந்தது. அதனை சோதனையிட்டபோது, அது சாதாரண பித்தளை செம்பு என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இரிடியம் என்று விற்பனை செய்த குமார், ராஜேஷ் இருவரும் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது தெரிய வந்தது. இவ்வாறு கூறினர்.

இதனையடுத்து குமார், ராஜேஷ் மீது க.விலக்கு போலீசில் ஜஸ்டின் ஜெயக்குமார் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர். பித்தளை செம்பை வண்ணம் பூசி இரிடியம் என கூறி ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆண்டிபட்டியில் ஒரு ‘சதுரங்க வேட்டை’ பித்தளை செம்புக்கு பெயின்ட் அடித்து இரிடியம் என ரூ.9.50 லட்சம் மோசடி: 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: