டெல்லி குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் கடமை பாதையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதனை ஒன்றிய அரசின் சார்பில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் மூலம் அந்தந்த மாநிலங்களின் சார்பாக, மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவை உயர்மட்ட குழுவினரால் உறுதி செய்யப்படுகின்றன. கடந்த 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்திகள் சிறப்பாக பங்கேற்றதோடு, 2024ம் ஆண்டுக்கு சிறந்த வடிவமைப்பிற்கான 3ம் பரிசினையும் தமிழ்நாடு பெற்றது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் சார்பில் நடைபெறுகின்ற குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு; ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சார்பில் தொடர்ந்து 2 ஆண்டுகள் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமேயானால், அடுத்து வருகிற 3ம் ஆண்டு வாய்ப்பு வழங்கிட இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
என்றாலும், அந்தந்த மாநிலங்களின் சார்பில் வழங்கப்படுகின்ற சிறந்த கருப்பொருள்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை கடமைப்பாதையில் பங்கேற்காமல், அணிவகுப்பு நிறைவு பெற்ற பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்திக் கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளது. இதுபோன்ற அரசின் நடைமுறைகளை, உள் விவகாரங்களை ஒரு முதல்வராக பணியாற்றியவர் என்பதையும் மறந்துவிட்டு, ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பெயரில், யாரோ எழுதித்தருகின்ற தகவல்களின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பதவி என்பது மிகுந்த மரியாதைக்குரியது என்பதை உணர வேண்டும். அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்று ஒரு நடைமுறையை ஒன்றிய அரசின் ஆணை தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றாமல் உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து 3வது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமும் நேர்மையும் அற்ற, பாரபட்சமான செயல் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post டெல்லி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக அரசு விளக்கம் appeared first on Dinakaran.