அரசுக்கு ரூ.46 கோடி இழப்பு கிரானைட் முறைகேடு வழக்கு 6 மாதத்தில் முடிக்க உத்தரவு

மதுரை: அரசுக்கு ரூ.46 கோடி இழப்பை ஏற்படுத்திய கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் தும்பைப்பட்டி பகுதியில் ஓடை புறம்போக்கு நிலத்தையும், அதை ஒட்டிய பட்டா நிலத்தையும் ஆக்கிரமித்து கிரானைட் கற்களை சட்டவிரோதமாக எடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதுகுறித்து தனிப்படை போலீசார் ஆய்வு செய்து, பெரியசாமி, பாபு, அருண், மதன்குமார், கருணாநிதி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ல் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பெரியசாமி உள்ளிட்டோர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மனுதாரர்கள் ரூ.46 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஆய்வில் உறுதியானது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் ஓடை புறம்போக்கு மற்றும் பட்டா நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கு பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

மனுதாரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என ஏற்கனவே நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கை மதுரை மாவட்ட கனிம வள விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றம் தினசரி விசாரித்து 6 மாதத்தில் முடிக்க வேண்டும். விசாரணையை மனுதாரர்கள் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்பட்டால், அவர்களை காவலில் வைக்கவும், உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

The post அரசுக்கு ரூ.46 கோடி இழப்பு கிரானைட் முறைகேடு வழக்கு 6 மாதத்தில் முடிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: