ராணிப்பேட்டை டூ ஆந்திரா வரை ரூ.1,338 கோடியில் 4 வழி சாலை: 4 பெரிய பாலம், 2 ரயில்வே மேம்பாலங்களும் அமைகிறது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை முதல் ஆந்திரா எல்லை வரை 4வழி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஒன்றிய அரசு ரூ.1,338 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 4 பெரிய பாலங்கள், 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சாலைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரதிபலிக்கும் முக்கிய காரணி. நாடு முழுவதும் 4 வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எந்தவொரு நாட்டிற்கும் சாலை உட்கட்டமைப்பு மிகவும் முக்கியமானது.

சாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே வளர்ச்சி உறுதி செய்யப்படும். மேலும், ஓர் இடத்தில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகளை மற்றொரு இடத்திற்கு குறைந்த செலவில் எடுத்துச் செல்வதிலும் சாலை உட்கட்டமைப்பு முக்கியமானதாக இருக்கிறது.  இந்நிலையில் ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, தமிழ்நாட்டில் சாலை மேம்பாடு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை 40ல் வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டையில் இருந்து தமிழ்நாடு-ஆந்திரா எல்லை வரை 28 கி.மீ தொலைவிலான நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு ரூ.1,338 கோடியை ஒதுக்கியுள்ளோம். இந்த நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக இருக்கும். இரு மார்க்கமும் 2 வழி சர்வீஸ் சாலைகள் இருக்கும். வாலாஜாபேட்டை- ராணிப்பேட்டைக்கு 10 கி.மீ தூரம் புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த சாலை சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இருக்கும் வேலூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இது பெல் நிறுவனம் மற்றும், தோல் மற்றும் சிறிய அளவிலான பொறியியல் உட்பட உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் அமையும். ராணிப்பேட்டையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் 2025ல் நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை அப்பகுதிக்கு உறுதி செய்கிறது.

அதே நேரத்தில் 2-வழி சர்வீஸ் சாலை உள்ளூர் போக்குவரத்தை உறுதி செய்கிறது. மேலும், இந்த நெடுஞ்சாலையை வாகனங்கள் அணுக சில பகுதிகளில் மட்டுமே பாதை இருக்கும். இதன் மூலம் வாகனங்கள் தங்கு தடையில்லாமல் விரைவாக செல்ல முடியும். என்.ஹெச் 40ல் தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 40 என்பது முன்பு இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் 4 மற்றும் 18 ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாகும்.

இந்த நெடுஞ்சாலை ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்குகிறது. இது கடப்பா மற்றும் சித்தூர் வழியாக ராணிப்பேட்டை வரை நீள்கிறது. ஏற்கனவே கர்னூல் முதல் கடப்பா வரையிலான பகுதி நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரையிலான பகுதியையும் 4 வழிச்சாலையாகத் தரம் உயர்த்த ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது’ என்று தெரிவித்தனர்.

The post ராணிப்பேட்டை டூ ஆந்திரா வரை ரூ.1,338 கோடியில் 4 வழி சாலை: 4 பெரிய பாலம், 2 ரயில்வே மேம்பாலங்களும் அமைகிறது appeared first on Dinakaran.

Related Stories: