திருப்போரூர் அருகே ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் ஒருவர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் அருகே ஏடிஎம்மில் பணம் எடுக்கச்சென்றவரிடம், ஏடிஎம் கார்டை மாற்றிக்கொடுத்து மோசடியில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்போரூர் அடுத்த மயிலை கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் (45). கடந்த அக்டோபர் மாதம் 2ம்தேதி கரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏடி.எம்.மில் பணம் எடுப்பதற்காக சென்றிருந்தார். இருமுறை தனது ஏ.டி.எம். கார்டை செலுத்தியும் பணம் வராததால் அங்கேயே நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது கார்டை வாங்கி பணம் எடுத்துத் தருவதாககூறி சில நிமிடங்களில் பணம் வரவில்லை என்று சொல்லி திருப்பிக்கொடுத்து விட்டார்.

இதையடுத்து மறுநாள் அதே ஏ.டி.எம். கார்டை எடுத்துக்கொண்டு வேறொரு ஏ.டி.எம்.முக்கு சென்றபோது, அவர் வைத்திருந்த கார்டில் வேறு பெயர் இருந்தது. இதையடுத்து, தனது கணக்கு உள்ள வங்கிக்கு சென்று விசாரித்தபோது உங்களது கணக்கில் இருந்து ஒரே நாளில் மட்டும் 39,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ராம்குமார் இதுகுறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இதேபோன்ற குற்றச்சம்பவம் ஒன்றில் வேலூர் மாவட்டம், கழிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் (34) என்பவர் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருப்போரூர் போலீசார் அந்த நபரை நீதிமன்ற உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராம்குமாரிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பணம் எடுத்தது இதே நபர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கிலும் அருண்குமாரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post திருப்போரூர் அருகே ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: