தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது?.. வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல்


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றன. இதன் உறுதி தன்மையை வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வீராணம் ஏரியின் பங்கு முக்கியமானது. சென்னையில் குடிநீர் பற்றாக்குறையை போக்க கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து சென்னைக்கு சுமார் 220 கி.மீ தூரத்துக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அதிகபட்சமாக 76 கனஅடி வரை இந்த குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில் இந்த குழாய்கள் மண்ணில் புதைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டாலும் ஆறுகள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் மட்டும் கான்கிரீட் பாலங்கள் கட்டப்பட்டு அதன் மீது இந்த குழாய்கள் அமைத்து குடிநீர் ெகாண்டு செல்லப்படுகிறது. அப்படித்தான் மிக நீண்ட தூர ஆறான தென்பெண்ணை ஆற்றில் சுமார் 1.50 கி.மீ. தூரத்துக்கு சிமெண்ட் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு அதன் மீது இந்த குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் 10 அடி ஆழத்துக்கு தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது இந்த குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இந்த வீராணம் குடிநீர் திட்ட தூண்கள் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 26ம் தேதி முதல் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தன.

மேலும் சாத்தனூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் இரு கரைகளை தொட்டவாறு காட்டாற்று வெள்ளம் சென்று கொண்டிருந்தது. வீராணம் குழாயை தொடும் அளவுக்கு வரலாறு காணாத வெள்ளம் சென்று கொண்டிருந்தன. இதனால் கரையோர கிராமங்கள் பலத்த சேதத்துக்குள்ளாகின. மேலும் ஆறுகளில் கட்டப்பட்ட பாலங்களிலும் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டது. குறிப்பாக சென்னைக்கு செல்லும் வீராணம் ஏரி குடிநீர் திட்ட குழாய்க்கு அடிப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிமெண்ட் தூண்கள் மிகவும் சேதமடைந்து பில்லர்கள் தெரியும் அளவுக்கு காணப்படுகின்றன.

சில தூண்களில் கான்கிரீட் ஜல்லிகள் பெயர்ந்தும் காணப்படுகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த பகுதிகள் வலுவிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. எனவே துறை சார்ந்த வல்லுனர்கள் குழு இந்த பகுதிகளில் அமைக்கப்பட்ட வீராணம் குடிநீர் குழாய் பாலங்கள், தூண்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வீராணம் கூட்டு குடிநீர் குழாய் தூண்கள் வலுவிழந்தது?.. வல்லுனர்கள் குழு ஆய்வு செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: