இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் சமீபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டம் நடத்தி முதலமைச்சரின் உத்தரவின்பேரில், தகுதியானவர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதை உறுதிப்படுத்த கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு விவரங்கள் சமர்பிக்க கேட்டிருந்தார். அதன்படி, மாவட்டம் முழுவதும் அரசு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா தொடர்பான கணக்கீடு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இலவச வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடு கட்டிக்கொண்டு வசித்து வருகின்றனரா, காலியாக உள்ளதா போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கிராம நத்தம், பாறை புறம்போக்கு, ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வருபவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா பெற்று இதுவரை வீடு கட்டாமல் காலியாக வைத்துள்ளவர்களின் பட்டா ரத்தாகும் என்று பயனாளிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையே, திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூர் உராட்சியில் 110 குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிடர்களுக்கு கடந்த 2001ல் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவில் வீடுகள் கட்டி குடியேற கால அவகாசம் தர வேண்டும் என்று வலியுறுத்தி பயனாளிகள் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
The post திருவள்ளூர் மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா விவரங்கள் கணக்கெடுப்பு: வீடு கட்டாவிட்டால் பட்டா ரத்தா? அவகாசம் கேட்டு பயனாளிகள் மனு appeared first on Dinakaran.