நீதிமன்ற உத்தரவின் பேரில் வணிக வளாகத்திற்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரில், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையின் முன்பு, மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அம்மா உணவகம் உள்பட 22க்கும் மேற்பட்ட சிறு கடைகள் கடந்த 30 வருடமாக இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு போதிய இட வசதி இல்லாததால் பழமையான 22 கடைகளுடன் கூடிய வணிக வளாகத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து வணிக வளாகத்தில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் விநியோகித்து காலி செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

அதற்கு வியாபாரிகள், வணிக வளாகத்தை இடித்து விட்டால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைகளை மூடி சீல் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து திருவொற்றியூர் மண்டல வருவாய் ஆய்வாளர் அர்ஜுனன் தலைமையில் அதிகாரிகள் வந்து 22 கடைகளுக்கும் சீல் வைத்தனர். திடீரென்று வந்து கடைகளை சீல் வைத்ததால் கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சீல் வைக்கக் கூடாது, கால அவகாசம் வேண்டும் என கேட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஒரு மாதத்திற்கு தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்றும் பின்னர் தாங்களாகவே வணிக வளாக கடையை ஒப்படைத்து விடுகிறோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதற்கு சீல் வைத்த நடவடிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விடுவோம். நீதிமன்றம் அனுமதி வழங்கினால் ஒரு மாத காலத்திற்கு வணிக வளாகத்தை தொடர்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீதிமன்ற உத்தரவின் பேரில் வணிக வளாகத்திற்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: