இந்த வெப்ப நீரோட்டமானது குமரிக் கடல் பகுதியில் இருந்து லட்சத் தீவு வரை தற்போது வலுவடைந்துள்ளது. அரபிக் கடலிலும் வெப்பம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. அது மேலும் வலுப்பெற்று நேற்று மாலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையான மேகமூட்டம் சூழ்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று (16ம்தேதி) நள்ளிரவில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 17ம் தேதி அதிகாலையில் சென்னையில் மழை பெய்யத் தொடங்கிவிடும். 20ம் தேதி வரை இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். 17ம் தேதியில் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 18ம் தேதியில் கடலூர், விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கன மழை முதல் மிக கனமழையும் பெய்யும். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதே நிலை 20ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த மழையில் பல்வேறு இடங்களில் நீர்த் தேக்கங்களில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்யப் போகும் மழையாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற வட மாவட்டங்களில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்பது ஒரு குறையாக இருந்தது. ஆனால் அந்த பகுதிகளிலும் தற்போது அதிக மழை பெய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஏற்கனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீண்டும் மழையால் கடும் மழை பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இலங்கை, வட கடலோர மாவட்டங்களிலும், தெற்கு ஆந்திரா வரை இந்த பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று 55 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். 17ம் தேதி தெற்கு மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
* தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: டெல்டா மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மழை சென்னையில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.