களக்காடு : களக்காடு அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேரும், போதையில் அவதூறாக பேசியதால் தீர்த்து கட்டியதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள டோனாவூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அந்தோனி தாஸ் (44). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி சுபா (41). தம்பதியினர் தங்களது ஒரு மகள் மற்றும் இரு மகன்களுடன் மாவடி புதூர் நாராயணசுவாமி கோவில் தெருவில் வசித்து வந்தனர்.
இதனிடையே மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளான அந்தோனிதாஸ், தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம். இதேபோல கடந்த 7ம் தேதி இரவும் போதையில் வந்த அந்தோனி தாஸ், சிறிதுநேரத்திற்குப் பிறகு தூங்குவதற்காக வீட்டு மாடிக்கு சென்றார்.
பின்னர் அவர் வீட்டில் தலையில் படுகாயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அளவுக்கு அதிகமாக அந்தோனி தாஸ் மது அருந்திய காரணத்தால் போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலியாகி இருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த ஏர்வாடி இன்ஸ்பெக்டர் சுதா, திருக்குறுங்குடி எஸ்ஐ ஆபிரகாம் ஜோசப் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவரது உடலில் நெற்றி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததும், அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணையில் அந்தோனிதாஸை அவரது குடும்பத்தினரே கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரது மனைவி சுபா, மகன்கள் எபனேசர் (23), ஜெனிபர் (20), மகள் சோபன பிரியங்கா (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்தோனிதாஸ் தினமும் மது அருந்தி விட்டு வந்து போதையில் எங்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்றும் அவர் மது போதையில் எங்களை அவதூறாக பேசினார். இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவரை சரமாரியாக தாக்கியதோடு அவரது கழுத்தை நெரித்தோம். இதில் அவர் உயிரிழந்து விட்டார் என பரபரப்பு வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
The post களக்காடு அருகே தொழிலாளி அடித்துக் கொலை மனைவி, 2 மகன்கள், மகள் கைது appeared first on Dinakaran.