10 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரிப்பு

*நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நீர் நிலைகளில் மீண்டும் தண்ணீர் செல்வதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் விவசாய பகுதி அதிகமுள்ள பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார குக்கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாய தேவைக்கும் தடுப்பணை மற்றும் குளம், குட்டைகள் ஏராளம் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து தடுப்பணை மற்றும் குட்டைகள் மூலமாக சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

அவ்வாறு, மாத கணக்கில் தண்ணீர் தேங்கியிருக்கும்போது நிலத்தடி நீர் உயர்ந்து விசாய நிலங்கள் பயன் பெறுகிறது. ஆண்டுதோறும், கோடை மழைக்கு பிறகு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்வதால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் செழிப்படைகிறது.

இதில், 2012ம் ஆண்டு என சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பருவமழை பெய்வது குறைவானது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு அல்லது வடகிழக்கு பருவமழை ஏதேனும் பொய்த்துவிடுகிறது. இதனால் அடிக்கடி வறட்சி நிலவியது.

அதிலும், சில ஆண்டுகளில் குறிப்பிட்ட சில மாதத்தை தவிர பல மாதங்களாக மழையின்றி, வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்ததால், சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தடுப்பணை மற்றும் குளங்களில் தண்ணீர் வெகுவாக குறைந்து வற்றியது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்தது.

இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனர். சில ஆண்டுகளில், தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு விவசாயிகள் பலர் காய்கறி சாகுபடியை குறைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பல மாதமாக தொடர்ந்து பெய்துள்ளது. இதனால், பல கிராமங்களில் உள்ள தடுப்பணை மற்றும் குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்த ஆண்டில் மே மாதத்தில் பல நாட்களாக கோடை மழை பெய்துள்ளது. அதன்பின் தென்மேற்கு பருவமழை சுமார் இரண்டு மாதமாக பரவலாக பெய்தது. இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் துவக்கத்திலிருந்து வடகிழக்கு பருவமழை பல வாரமாக பரவலாக பெய்தது. சில நாட்களில் வயல்வெளி மற்றும் தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேக்கம் அதிகமாக இருந்தது.

இதனால், பல இடங்களில் வாய்க்கால் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து அருகே உள்ள குளம், குட்டைகளை சென்றடைந்தது. மேலும் அவ்வப்போது பெய்த பருவமழையால், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள தடுப்பணை, குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

அதிலும் பல கிராமங்களில், பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்த நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்ல துவங்கியது. மேலும், கிராமங்கள் வழியாக காட்டாற்று வெள்ளம் செல்ல வசதியாக ஏற்படுத்தப்பட்டு, பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் இருந்த நீர் நிலைகளிலும் தண்ணீர் ததும்பியவாறு உள்ளது.

நீரோடைகளிலும், தண்ணீர் ஆறாக கறை புரண்டு ஓடுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் ததும்பி செல்வதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post 10 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி, ஆனைமலை சுற்று வட்டார நீர் நிலைகளில் தண்ணீர் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: