இருப்பினும் திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்வர்.அன்றைய தினம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்படுகிறது.
இதன் காரணமாக திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றனர்.இலவச வீட்டுமனை பட்டா,நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்குவது,புதிய ரேஷன் கார்டு,அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளிக்கின்றனர்.
அவ்வாறு மனு அளிக்க வரும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு தரைத்தளத்தின் வராண்டா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமர்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக வராண்டா பகுதியில் நாற்காலி உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தரைகளில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மனுவை பதிவு செய்து ரசீது பெற காத்திருக்கும் மக்கள் தங்கள் ரசீது எண் அழைக்கபட்டவுடன் கூட்ட அரங்கிற்கு செல்ல அமர்ந்திருப்பவர்களை கடந்து செல்லும்போது அவர்களை முட்டி,மோதி கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவ்வப்போது சலசலப்பு ஏற்படுகிறது. இச்சூழலை தவிர்க்க வராண்டா பகுதியில் இருக்கை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கலெக்டரிடம் மனு அளிக்க வரும் மக்களுக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.