அரூர் : அரூர் அருகே கனமழையால் சேதமடைந்த சித்தேரி மலைப்பாதையில் 10 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர்.பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த வாரம் தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை கொட்டித் தீர்த்தது.
அப்போது, சித்தேரி மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில், சூரியக்கடை பிரிவு சாலை அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால், 63 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் சாந்தி, துரித நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்குமாறு நெடுஞ்சாலைத்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோட்டப்பொறியாளர் நாகராஜ் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து சாலை சீரமைப்பு பணியை முடுக்கி விட்டனர். சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்பட 45 ஊழியர்கள் ஒன்றிணைந்து சுமார் 80 அடி பள்ளத்தில் 10 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி சரி செய்தனர்.
மண் சரிவு ஏற்பட்ட இடத்தை 3 நாட்களில் சீர் செய்தனர். இதையடுத்து, மீண்டும் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. மண் சரிவு ஏற்பட்ட 3 நாட்களிலேயே நெடுஞ்சாலைத்துறையினரின் துரித நடவடிக்கையால் மலைப்பாதை சீரமைக்கப்பட்டதால் சித்தேரி கிராம மக்கள் மகிழ்ச்சிய
டைந்துள்ளனர்.
The post அரூர் அருகே 10 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி மலைப்பாதை சீரமைப்பு appeared first on Dinakaran.