சென்னையில் 27ம் தேதி புத்தகக்காட்சி தொடக்கம்

சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 27ம் தேதி மாலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகக் காட்சியை தொடங்கி வைக்கின்றனர்.

இந்த புத்தகக் காட்சியில் மேற்கண்ட சங்கத்தில் இடம் பெற்றுள்ள 900 பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்காக 2 லட்சம் சதுர அடியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் அரங்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அரங்கு, பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு அரங்கு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தொல்லியல் துறை, இல்லம்தேடிக் கல்வி ஆகியவையும் இடம் பெறுகின்றன. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த 47வது புத்தகக் காட்சிக்கு சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர்.

அதன் மூலம் ரூ.21 கோடி மதிப்பு புத்தகங்கள் விற்பனையானது. புத்தகக் காட்சிக்கு வருவோருக்கு நுழைவுக் கட்டணம் ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ, மாணவியர் வந்து செல்லும் வகையில் 10 லட்சம் டிக்கெட் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பொங்கல் விடுமுறைக்கு முன்னதாக பொதுமக்கள் இங்கு வந்து செல்லும் வகையில், இந்த ஆண்டு முன்னதாகவே புத்தகக் காட்சி தொடங்குகிறது. அரசு சார்பில் வழக்கம்போல இந்த ஆண்டு ரூ.75 லட்சம் உதவி வழங்க உள்ளனர்.

The post சென்னையில் 27ம் தேதி புத்தகக்காட்சி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: