செய்துங்கநல்லூர் : வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமூகப் பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ.71.50 லட்சம் செலவில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.25 லட்சம் செலவில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகள், பழைய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.6.50 லட்சம் செலவில் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு போன்ற கட்டுமான பணி நடந்தது. இதையடுத்து வல்லநாடு ஆரம்பசுகாதார நிலையத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா கலெக்டர் இளம் பகவத் தலைமையில் நடந்தது.
மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கனிமொழி எம்.பி., பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புற நோயாளிகள் மற்றும் ஆய்வகம், அறுவை சிகிச்சை மையம், பழைய புற நோயாளிகள் கட்டிடம் போன்றவைகளை திறந்து வைத்து பேசினார். தொடர்ந்து அவர் கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
விழாவில் கலெக்டர் இளம் பகவத் பேசுகையில் ‘‘வல்லநாடு ஆரம்பசுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. விரைவில் மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.நிகழ்ச்சியில் சண்முகையா எம்எல்ஏ , தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதாரப் பணிகளுக்கான துணை இயக்குநர் யாழினி, நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், கருங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணஜோதி, வட்டார சித்த மருத்துவ அலுவலர் செல்வகுமார், பிடிஓ ஜவகர், மருத்துவ அலுவலர் காவ்யா, சுகாதார ஆய்வாளர்கள் பாலக்கண்ணன், ஜெயராஜ், கார்த்திக் ராஜா, பிரசாத், அக்ஸிலின், ஆஸ்லின் செல்வராஜ், வட்டார அட்மா சேர்மன் குமார், ஒன்றியச் செயலாளர்கள் வடக்கு ராமசாமி, தெற்கு கால்வாய் இசக்கி பாண்டியன் கிழக்கு சுரேஷ் காந்தி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சுரேஷ், வீரபாகு, வல்லநாடு பஞ். தலைவர் சந்திரா முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.09 கோடி செலவில் புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம் appeared first on Dinakaran.