பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மறைந்து முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏக்கள் முகமது கனி, ஜெயராமன், தங்கவேல்ராஜ், கணேசன், ரமேஷ், சண்முகம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான (2024ம் ஆண்டு) முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. பிப்ரவரி 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. பிப்ரவரி 19ம் தேதி தமிழக அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொடர்ந்து 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் மீது 22ம் தேதி வரை விவாதம் நடந்தது. இறுதியில் அமைச்சர்கள் பதில் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் டிசம்பர் 9, 10ம் தேதி என 2 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி தமிழக சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது appeared first on Dinakaran.

Related Stories: