திமுக தொடர் வெற்றி பெறுவதால் கூட்டணியை சீர்குலைக்க அதிமுக, பாஜ சதி: திருமாவளவன் பேட்டி

மதுரை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிகவின் பெயரை கெடுக்கும் வகையில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகார் குறித்து தலைவர், பொதுச்செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதித்து முடிவு எடுத்து விரைவில் அறிக்கப்படும். திமுகவின் அழுத்தம் காரணமாக நான் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறுவது தவறு. இதில் நான் பங்கேற்காதது சுதந்திரமாக எடுத்த முடிவு. விசிக குறி வைக்கப்படுகிறது என்பதை விட திமுக கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான சதி நடக்கிறது. விசிக புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை.

திமுக கூட்டணி தொடர் வெற்றி பெற்றுள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தடுக்க இந்த கூட்டணியை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜகவின் நோக்கம். இதற்கு விசிகவை கருவியாக பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் விசிக இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒன்றிய அரசு விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என ஏற்கனவே நானும், எம்பி ரவிக்குமாரும் ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தராயை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரண நிதி: திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: தமிழ்நாட்டைத் தாக்கிய பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ.10 லட்சம் வழங்க உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

The post திமுக தொடர் வெற்றி பெறுவதால் கூட்டணியை சீர்குலைக்க அதிமுக, பாஜ சதி: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: