மேலூர்: அரிட்டாபட்டியில் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை பாமக தலைவர் அன்புமணி சந்தித்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என்று உறுதியளித்தார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கு அரிட்டாபட்டி உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, அரிட்டாபட்டி மற்றும் அ.வள்ளாளப்பட்டியில் போராட்டம் நடத்தி வரும் கிராம பொதுமக்களை நேற்று நேரில் சந்தித்தார். பொதுமக்களிடம் அவர் கூறியதாவது: இப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு பாமக உறுதுணையாக இருக்கும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில், இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இப்பகுதியில் இருந்து 5 ஆயிரம் ஏக்கர் இல்லை. ஒரு சென்ட் இடம் கூட ஒன்றிய அரசு எடுக்க சம்மதிக்க மாட்டோம். டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்ற விட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஒன்றிய அரசு அறிவித்துள்ள டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம்: கிராம மக்களிடம் அன்புமணி உறுதி appeared first on Dinakaran.