சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான தகவலின்படி பாஜ நன்கொடையை நேரடியாக ரூபாய் 2244 கோடியை கடந்த ஆண்டு பெற்றிருக்கிறது. கடந்த 2022-23ம் ஆண்டு தேர்தல் பத்திர நன்கொடை மூலம் பெற்றதை விட 212 சதவிகிதம் அதிகமான நிதியை பாஜ பெற்றிருக்கிறது. தேர்தல் பத்திர நன்கொடை திட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொடர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் நிதியை நேரடியாக பெற்றிருப்பதை இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது. மகாராஷ்டிரா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பா.ஜ.வுக்கு ஆதரவாக பாரபட்சமாக நடந்தது என்ற குற்றச்சாட்டையொட்டி தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் பெறும் நிதியை பெற்று வருவதால் தேர்தல் களம் சமநிலைத்தன்மையை இழந்து வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post பாஜவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நிதி தேர்தல் களம் சமநிலைத் தன்மையை இழந்துள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.