விழுப்புரம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம், டிச. 8: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 14ம் தேதி அன்று பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.

இதற்காக வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூர், புதுச்சேரி பகுதிகளில் இருந்தும் 4,089 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு 10,110 நடைகள் இயக்கப்பட உள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 மினி பேருந்துகள் கட்டணமில்லாமல் இயக்குவதற்கும், அரசின் வழிகாட்டுதலின்படி பயணிகளின் வசதிக்காக 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

எந்தெந்த மார்க்கங்களுக்கு எந்தெந்த பேருந்து நிலையம்: திண்டிவனம் ரோடு ஒழுங்குமுறை விற்பனை கூட பேருந்து நிலையத்தில் இருந்து செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கிளாம்பாக்கம், அடையாறு, மாதவரம் பேருந்துகள் புறப்படும். செங்கம்ரோடு அத்தியந்தல் மைதானம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், செங்கம்ரோடு சித்தர் சமாதி மைதானம் பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூருக்கும், வேலூர் ரோடு அண்ணா ஆர்ச் பேருந்து நிலையத்தில் இருந்து போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல் சேத்துப்பட்டு ரோடு செல்வபுரம் சிவக்குமார் மைதானம் பேருந்து நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம் பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் ரோடு டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் இருந்து காஞ்சி, புதுப்பாளையம், மேல்சோழங்குப்பம் பகுதிகளுக்கும், வேட்டவலம் ரோடு சர்வேயர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து வேட்டவலம், விழுப்புரத்துக்கும், திருக்கோயிலூர் ரோடு மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாசலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், மணலூர்பேட்டை ரோடு எஸ்ஆர் ஸ்டீல் கம்பெனி எதிரில் உள்ள மைதானம் பேருந்து நிலையத்தில் இருந்து மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 4,089 பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: