வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்: மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை

சென்னை: தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா ஹேமச்சந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் வருகிற 10ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் தீவிரமடைய உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் செப்டம்பர் மாதம் உருவாக வேண்டிய சூறாவளி புயல்கள் அக்டோபர் மாதம் தாமதமாக உருவானது. நவம்பர் மாதத்தில் மேற்கு பசிபிக் பெருங்கடல் அதிகமான சூறாவளி புயலை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாகவே டிசம்பர் மாதத்திலும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி மழை பொழிவை கொடுத்து வருகின்றன. சுமத்ரா தீவு அருகே தற்போது காற்று சுழற்சி நிலவுகிறது.

இந்த காற்று சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் பயணிக்கும். இந்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றாலும் கடற்கரைக்கு அருகே செல்லும் போது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 11ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் 4ம் கட்ட வடகிழக்கு பருவமழை பெய்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 11ம் தேதி இரவு தொடங்கும் மழை 15ம் தேதி வரை நீடிக்கும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். தென் மாவட்டங்களிலும் மழை பொழிவு இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெஞ்சல் புயல் மழையால் நீர் நிலைகளில் 45 சதவீதமாக இருந்த தண்ணீர் அளவு 65 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இதன்பிறகு 5ம் கட்ட வடகிழக்கு பருவமழை வருகிற 18ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் பெய்வதற்கான சூழலும் உள்ளது. 18ம் தேதிக்கு பிறகு உருவாக உள்ள தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கு சாதகமான சூழல் உள்ளது. கூடுதல் எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் அவசியமாகும்.

The post வரும் 10ம் தேதி முதல் 27ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்: மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: