பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு

சென்னை :பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த அலுவலர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பாராட்டு தெரிவித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி, அவர்கள் தலைமையில் இன்று (12.12.2024) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்/தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோரின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பதிவுத்துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி (11.12.2023) வரை வருவாய் ரூ.12634 கோடியும் நிகழும் 2024-2025 நிதி ஆண்டின் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி (11.12.2024) வரை ரூ.14525 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டில் நேற்று வரையில் ரூ.1891 கோடி வருவாய் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் அவர்கள், அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த பதிவுத்துறை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்து, இந்த நிதி ஆண்டின் மீதமுள்ள மாதங்களிலும் வருவாய் இலக்கினை எய்திட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.மேலும் பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் சதவீதம் கூடியிருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டு தெரிவித்து, அனைத்து சார் பதிவாளர்களும் மேற்கண்ட பணியினை சிறப்பாக செய்வதை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் துணை பதிவுத்துறை தலைவர்கள் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரஜேந்திர நவ்நீத் இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித்தந்த அலுவலர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: