அதனை அப்பகுதி பொதுமக்கள் குடங்களில் பிடித்து தங்களது வீடுகளில் உபயோகிக்க தொடங்கினர். இந்நிலையில் அந்த குடிநீரை பருகிய பொதுமக்களில் 23 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, சிகிச்சைக்காக சிலரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மேலும் சிலரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த திரிவேதி கிருஷ்ணன் (54) மற்றும் மோகன ரங்கன் (43) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே இதற்கு என்ன காரணம் என்று பொதுமக்கள் பார்த்தபோது, குடிநீரில் கழிவுநீர் கலந்து குழாயில் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், மருத்துவர்களின் சோதனையில் உயிரிழந்த திரிவேதிகிருஷ்ணன் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாகவும், கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் 12க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஆகியோர் உடனடியாக விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே செய்திகளை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது கூட இந்த மருத்துவமனையில் 30 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் 3 பேர் இறந்திருக்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார். இங்கு 19 பேர் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இதில் இரண்டு பேர் இறந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள். மேலும் ஒருவர் படுத்த படுக்கையாக இருந்து இறந்திருக்கிறார். இவ்வாறு கூறினார்.
* தரமற்ற உணவா, குடிநீரா என்பது குறித்து ஆய்வு: தமிழ்நாடு அரசு தகவல்
தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதி மற்றும் பல்லாவரம் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் பல்லாவரம் மண்டலக்குழு தலைவர் அனைவரும் கன்டோன்மென்ட் மற்றும் தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் காமராஜர் நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
கன்டோன்மென்ட் பகுதியில் வரலட்சுமி (88), மோகனரங்கா (42) வசித்து வந்தனர். இதில் மோகனரங்கா என்பவர் மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் இறந்துவிட்டார். பல்லாவரம் காமராஜர் நகர் (வார்டு-13) மாங்காடு பகுதியிலிருந்து தனது உறவினர் வீட்டிற்கு வந்த திரிவேதி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்து விட்டார். இருவரின் உடல்களும் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறந்ததற்கான காரணம் தரமற்ற உணவா, குடிநீரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியில் 5 இடங்களிலும், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் காமராஜர் நகர் பகுதியில் 5 இடங்களிலும் தண்ணீர் மாதிரி பரிசோதனை செய்ய கிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்திலிருந்து 3 தினங்களுக்குள் அறிக்கை வரும் என தெரிகறிது.
மேலும், பல்லாவரம் காமராஜர் நகரில் தனியார் குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்த வாகனம் மாநகராட்சி மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்டோன்மென்ட் பகுதியில் 3 இடங்களிலும், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் காமராஜர் நகரில் 3 இடங்களில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு டாக்சிசைக்ளின், எரித்ரோமைசின், சிங்க் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பவுடர் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பல்லாவரம் பகுதியில் பரபரப்பு கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் பலி? பாதிப்பு பகுதிகளில் மருத்துவ முகாம்கள் appeared first on Dinakaran.