மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பின்னால் நின்றது. இரவு பகலென்று பாராமல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை திமுகவினர் வழங்கினார்கள். கொரோனா பொது முடக்கத்தில் வாழ்வாதாரங்களை மக்கள் இழந்து நின்ற போது அன்றைக்கு எதிர்க் கட்சித் தலைவராக இருந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் கட்டளையை ஏற்று, ‘ஒன்றிணைவோம் வா’ என்ற இயக்கத்தை நடத்தி நிவாரண உதவிகளை தமிழ்நாடு முழுவதும் செய்தோம்.
உதவிகள் வழங்குவதில் ஓடோடி வரும் திமுக, ஆட்சியில் இருக்கும் போது அதைவிட அதிகமாகவே நிவாரண உதவிகளையும் மீட்பு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு பேரிடர்களை எப்படி சிறப்பாக எதிர்க் கொண்டு செயல்பட்டது என்பதற்கு வரலாற்றுத் தடங்கள் உள்ளன. 2021-ல்ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே கொரோனா பாதிப்பை மிகச் சிறப்பாக சமாளித்து வெற்றிக் கண்டது. 2023 டிசம்பரில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைத் தாக்கிய மிக்ஜாக் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை திமுக அரசு சிறப்பாக செய்தது.
ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண உதவி கேட்டும் கிடைக்காத நிலையில், மிக்ஜாக் புயலால் பாதிக்கப்பட்ட 32,23,138 குடும்பங்களுக்கு ரூ.1933.88 கோடி நிவாரண தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அமைச்சர்கள், அதிகாரிகள் ஓடோடிச் சென்று தேவைப்படும் நிவாரண உதவிகளைச் செய்தார்கள். அதிகமாகப் பாதிக்கப்பட்ட 6,63,760 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 6,000 ரூபாய் வீதமும், ஓரளவு பாதிக்கப்பட்ட 14,31,164 குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், தலா ரூபாய் 1,000 வீதமும் நிவாரணத் தொகையாக 144.12 கோடி ரூபாயை மு.க.ஸ்டாலின் அரசு வழங்கியது.
தற்போது ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நேரத்தில் இருந்து இன்று வரையில் ஓயாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் அவர்களின் மிகச்சிறந்த நிர்வாகத்திறனால் (Administrative Skills) புயலுக்கு முன்பே திட்டமிட்டு, அனைத்து தரப்பையும் தயார்நிலையில் வைத்து, அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மிக விரைவாக இயல்புநிலையை மீட்டுக் கொண்டு வருவதில் திமுக அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
மாநில அவசரகால பேரிடர் மையத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு, அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வி. செந்தில் பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன் ஆகியோரை உடனடியாக அனுப்பியது, திமுக வார் ரூமில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியது, துணை முதலமைச்சர் .உதயநிதி ஸ்டாலின் அவர்களை வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தது, பாதிக்கப்பட்ட சென்னை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சரே நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை களத்திற்கு அனுப்பியது, மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுகு அனுப்பி பணிகளை முடுக்கி விட்டது என தொடர்ந்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு” என தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 2,000 கோடி ரூபாய் வழங்குமாறு ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியை அறிவித்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அரசு இயந்திரம் மட்டுமல்லாது திமுக தொண்டர்களையும் களத்தில் இறக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் இடர்ப்பாடுகளை போக்க தலைமைத் தளபதியாக நின்று செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் அவர்கள். திமுக நிர்வாகிகளும் களத்தில் இறங்கி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இதுவரையிலும் 25,000 உணவுப் பொட்டலங்களை விக்கிரவாண்டி தொகுதியில் விநியோகித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் 1 லட்சம் கிலோ அரிசியை அனுப்பினார். சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ள 1.5 லட்சம் கிலோ அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அதிமுக உள்ளிட்ட சில எதிர்க் கட்சிகள் பேரிடரிலும் அரசியல் செய்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க ஆட்சியில் 2005 டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட பெருமழையின்போது நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்து, எந்தவித திட்டமிடுதலும் இல்லாமல், சென்னை அசோக் நகர் பள்ளி முன் திரண்ட பொதுமக்கள் கூட்ட நெரிசலில் மிதிபட்டு 42 பேர் உயிரிழந்ததையும், வியாசர்பாடியிலும் 6 பேர் உயிரிழந்த அவலத்தையும் மறக்க முடியுமா! அதே போன்று, 2015-ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடுவதில் காலம் தாழ்த்தி, எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்துவிட்டதால், சென்னை மாநகரம் மூழ்கி வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. அப்போது அ.தி.மு.க.அரசு நிவாரணப் பணிகளில் காட்டிய அலட்சியம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதனை அன்றைக்கு பத்திரிகைககள் கண்டித்தன. தன்னார்வலர்களும் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை போட்டு அதிமுக ஸ்டிக்கர்கள் ஒட்டி அடாவடித்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அத்தகைய காட்சிகளோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசின் மக்கள் நலன் நாடும் தொண்டுகளை எல்லாம் நினைவு கூர்ந்து ஒப்பிட்டு, முதலமைச்சர் அவர்களை மக்கள் பாராட்டுவதை பொறுக்க முடியாமல்தான் அவதூறுகளை அள்ளி விசுகிறார்கள். மக்களின் மனங்களை வெல்லும் இயக்கும் திமுக. அதை இறுதி மூச்சு வரை செய்து கொண்டே இருக்கும் திராவிட மாடல் அரசு” என தெரிவித்தார்.
The post பேரிடரிலும் அதிமுக அரசியல் செய்கிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் appeared first on Dinakaran.