அரைத்த பொய்களையே அரைக்கும் பழனிசாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும்?அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் தாக்கு

சென்னை: அரைத்த பொய்களையே அரைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அறிக்கைகளிலும் எக்ஸ் தளத்திலும் பேட்டிகளிலும் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வாணமான நிலையில், இப்போது யூடியூப்பிலும் வந்து அதே புலம்பலை அதே பொய்களைக் கடைப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்.

பெஞ்சல் புயல், சாத்தனூர் அணைத் திறப்பு, பாலம் உடைப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சிபிஐ விசாரணை உத்தரவு என அவருடைய சமீபத்திய பொய்களை எல்லாம் உடனுக்குடன் ஆதாரத்துடன் திமுக அரசு தவிடுபொடியாக்கியும் கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல் அதே பொய்களை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். “ஆபத்தின் விளிம்பில் தத்தளிக்கும் போது அனைத்து கத்திகளும் உடைக்கிறதே என்னடா இது” என இம்சை அரசன் 23ம் புலிகேசியின் கேரக்டரைப் போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேட்டிகளும் அறிக்கைகளும், உண்மைகளால் தோலுரித்து தொங்கிய பிறகும், யூடியூப் மூலம் அதே ஆலாபனையைச் செய்கிறார்.

அதிலும் ஏற்கனவே அரைத்த மாவை மொத்தமாக சேர்த்து அரைத்திருக்கிறார். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினோம் எனச் சொல்லி வந்த அதிமுகவின் பொய்யை நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் மூலம் அம்பலப்படுத்தினோம். நாடாளுமன்றத்தில் சுரங்கம் மற்றும் கனிம திருத்த மசோதாவிற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவையில் பழனிசாமி சொன்ன பொய்யை அதிமுக எம்.பி. தம்பிதுரை அந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த விஷயத்தால் வெளிப்படுத்தினோம். இப்படி தொடர்ந்து அவமானப்பட்ட பிறகும் கூட பழனிசாமிக்கு ஏன் புரியவில்லை.

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும்? தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே முன்வைத்து முதல்வரின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் திராவிட மாடல் ஆட்சியால், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் கூறிய பொய்களையே திரும்பத் திரும்ப எத்தனை முறை கூறினாலும் எடுபடாது பழனிசாமி. தமிழ்நாட்டு மக்கள் மனதில் பொய்யர்களால் என்றைக்குமே இடம் பிடிக்க முடியாது, நீங்கள் ஆயிரம் பொய்களைக் கூறினாலும் திராவிட மாடல் நல்லாட்சி மீது சிறு கீறல் கூட விழவைக்க முடியாது இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அரைத்த பொய்களையே அரைக்கும் பழனிசாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணம் படித்த அறிவாளிக்கு எப்படி புரியும்?அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: