இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அண்மைக்காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. இதுகுறித்து கடந்த 7-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாக தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜூனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.
* ‘காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன்’
விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கை: ”அதிகாரத்தை அடைவோம்” என்று முழக்கத்தோடு அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இந்த மக்களுக்கான அதிகாரத்தை தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன்.
மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துகளை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சி தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.