பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் தாக்கல்: ரூ.3,531 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-205ம் ஆண்டுக்கு ரூ.3,541 கோடிக்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்தது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் ரூ.3 லட்சத்து 48 ஆயிரத்து 288 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-2025-ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

2024-25ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் வைக்க விழைகிறேன். இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் ரூ.3,531 கோடியே 5 லட்சம் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணை பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டசபையின் ஒப்புதலை பெறுவதும், எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்துக்கு, ஒன்றிய அரசு வைத்துள்ள வரைமுறைகளின்படி மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 0.50 சதவீதம் கூடுதல் கடன் பெறும் செயல்திறனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்துறை சீர்திருத்தத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி ரூ.1,634 கோடியே 86 லட்சத்தை கூடுதல் நிதி இழப்பீட்டு மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை பட்ஜெட்டில் ரூ.1,500 கோடி எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப்படுகிறது. மீதத்தொகை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறுநிதி ஒதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கிட, தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திற்கு ரூ.372 கோடியே 6 லட்சத்தை அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை பட்ஜெட்டில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எதிர்பாரா செலவு நிதிய சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, எதிர்பாரா செலவு நிதி ரூ.150 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீட்டை பெறுவதற்காக, துணை பட்ஜெட்டில் ரூ.350 கோடி நிதித்துறை மானியக்கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்திற்கு ரூ.70 கோடியை மானியமாக அரசு அனுமதித்துள்ளது. இத்தொகை, துணை பட்ஜெட்டில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட் தாக்கல்: ரூ.3,531 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: