குற்றத்திற்குத் தண்டனை வழங்கிய அம்பை எருத்தாளுடையார்!

புராணச் சிறப்பு

கங்கையாற்றங்கரையில் காசியும், அதில் காசி விஸ்வநாதர் கோயிலும் இருக்கின்றன. கங்கையாறு தண்பொருநை ஆற்றில் கலந்து வருவதாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. அக்கங்கையும், காசியையும் நினைத்து இவ்வூரான “அம்பாசமுத்திரம்’’ இறைவனுக்கு காசிநாதர் எனப் பெயர் வைத்து வழிபடலாயினர். ஆற்றில் இத்துறை காசி தீர்த்தம் எனப்பட்டது. காசிபர் என்ற முனிவர் வழிபட்டமையால் இறைவன் `காசிபநாதர்’ என அழைக்கப்பட்டதாகவும், செய்தி உள்ளது. இத்திருக்கோயிலுள்ள கல்வெட்டுகளில், முள்ளிநாடு ராஜராஜ சதுர்வவேதி மங்கலத்து இளங்கோக்குடி என இத்தலம் குறிப்பிடப்பட்டு, இறைவன் திருப்போத்துடைய நாயனார், திருப்போத்துடைய மாதேவர்.

திருப்போத்துடைய ஆழ்வார், திருப்போத்துடைய தேவர், திருப்போத்துடைய பட்டாரகர் எனவும் குறிப்பிடப்படுகிறார். போத்து என்பது காளையைக் குறிக்கும். அதனை வாகனமாக உடைய பெருமான் என்பதால் இறைவன் இவ்வாறு
அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயில் திருப்போத்தீசசரம் எனப்படுகிறது. இதுவே எருத்தாளுடையார் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது (எருத்து – காளை – எருது) இறைவன் எருத்தாளுடைய நாயனார் எனவும் அழைக்கப்படுகிறார். இது பிற்காலத்தில் மருவி, எரித்தாளுடையார் கோயில், எரிச்சாளுடையார் கோயில் எனவும் வழங்கப்பெற்றது.

அகத்தியரின் தரிசனம்

முற்காலத்தில் அந்தணர் ஒருவர் தல யாத்திரையாக இப்பகுதிக்கு வருகிறார். அப்போது இக்கோயிலில் அர்ச்சகராக இருந்தவருடன் நட்பு உண்டாகிறது. தான், பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசிக்க செல்வதாகவும், தான் வரும் வரை தன்னிடம் இருந்த விலை உயர்ந்த பொக்கிஷங்கள் நிரம்பிய கைத்தடி ஒன்றைக் கொடுத்து பாதுகாத்து தரும்படி கூறிவிட்டு சென்றுவிடுகிறார். பல காலம் அகத்தியரைத் தேடி அலைந்து திரிந்து கிடைக்கவில்லை. அதனால் பல காலம் பொதிகை மலையிலேயே தங்கினாராம். ஒரு நாள் திடீரென்று அகத்தியர் தரிசனம் கிடைத்த பின்னர், அம்பைக்கு திரும்பினார் அந்தணர். கொடுத்த கைத்தடி கேட்டகவும், நீங்கள் யாரென்று தெரியவில்லை என பொய் சொன்னாராம்.

அதுபோல மற்றொரு கதையாக, புகழ்பெற்ற ஒரு மன்னருக்கு ஏற்பட்ட கொடிய நோயைத் தீர்த்ததால் கிடைத்த பொன்னை, கோயில் அர்ச்சகரிடம் பாதுகாக்கச் சொல்லிக் கொடுத்து வைத்திருந்தான்; பிரமச்சாரி அந்தணர் ஒருவர். அடைக்கலப் பொருளை அபகரித்து பொய் சத்தியமும் செய்த அர்ச்சகரை, புளியமரத்தோடு சேர்த்து எரித்துத் தண்டித்ததால், சுவாமி எரித்தாட் கொண்டார் எனவும், எரிச்சாளுடையார் எனவும் காரணப் பெயர் பெற்றதாகக் கூறப்பட்ட வரலாறு அம்பைத் தல புராணத்திலும் இடம் பெற்றுள்ளது. எரிச்சாளுடையார் சுயம்புவாக மேற்கு முகமாக காட்சித் தருகிறார். சுவாமி எரித்தாண்டார் உக்கிர சொரூபமாக காட்சியளித்ததால் அவரின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக அவருக்கு நேர் எதிரே மகாவிஷ்ணு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அம்மை மகாவிஷ்ணுவிடம் வேண்டுகோள் செய்ய, மகாவிஷ்ணு சிவபெருமானை சாந்தப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமையுடையது. நீதியைக் காத்துத் தருமத்தை நிலைநாட்டிய எரித்தாட்கொண்ட மூர்த்தி காசிப முனிவரின்யாக அக்னியில் முளைத்த லிங்கம் என்பர்.

சிற்பச் சிறப்பு

ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட புனுகு சபாபதியின் நடனக்காட்சி, திருவாட்சி, பள்ளியறை மணியடி, மண்டபதூண்கள், வசந்தமண்டப தூண்களில் காணப்படும் சிற்பங்கள், முருகப் பெருமான், வள்ளி – தெய்வானை மயில் மீது அமர்ந்திருக்கும் ஒரே கல் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பான அம்சங்கள். முன்பகுதியில் உள்ள பெரிய மரக்கதவில் நுட்பமாக திருவிளையாடல் புராணக்கதைகள் செதுக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலில் சுவாமி கர்ப்பகிரக வடப்புறச் சுவர், தென்புறச்சுவர் ஆகியவற்றில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவைகள் மூலம் தொன்மை, ஊர்பெருமை, தானம், நிவந்தம் பற்றி அறிய முடிகிறது. தெற்கு நோக்கிய தனிக் கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறு கரத்தை கீழே தொங்க விட்டபடியும். நெற்றியில் ஒளி வீசும் மாணிக்கப் பட்டையும். மூக்கில் முக்குத்தி மின்னவும், புன்முறுவல் பூத்தபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் மரகதாம்பிகை. சுவாமி – அம்பாளை வழிபடுவோர்க்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், நிறைந்த செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

பங்குனிப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகின்ற நிகழ்வில், 8-ஆம் நாளன்று சுவாமி அம்மன் அகத்தியப் பெருமானுக்கு திருமணக்காட்சி அருளுதல், 9-ஆம் நாளில் திருத்தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். இவை தவிர திருவாதிரை, தைப்பூசம், கந்தசஷ்டி, மகாசிவராத்திரி திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகிறது.

வழித்தடம்

திருநெல்வேலியிலிருந்து 40கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, அம்பா சமுத்திரம் பேருந்து நிலையம். இங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.

The post குற்றத்திற்குத் தண்டனை வழங்கிய அம்பை எருத்தாளுடையார்! appeared first on Dinakaran.

Related Stories: